காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் சார்ந்த கழிவுகள் அதிகம் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு


காவிரி ஆற்றில் மருந்து பொருட்கள் சார்ந்த கழிவுகள் அதிகம் ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 7 Oct 2021 7:21 PM GMT (Updated: 7 Oct 2021 7:21 PM GMT)

காவிரி ஆற்றில் 22 இடங்களில் தண்ணீர் சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், மருந்து பொருட்கள் சார்ந்த கழிவுகள் அதிகளவில் கலப்பதாக சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து இருக்கின்றனர்.

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி. சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியரும், நிறுவனத் தலைவருமான கே.ஜி.கணபதி, டாக்டர் லீஜி பிலிப், நிதா ஆகியோர் தலைமையிலான சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சியாளர்கள் குழு, காவிரி ஆற்றில் அதிகரித்து வரும் மாசு பொருட்களை அளவிடும் ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆராய்ச்சி நதிநீரின் தரத்தை மதிப்பிடுவது, மாசுப்பொருட்களின் பரவலையும் அதன் காரணிகளையும் சுற்றுச்சூழல் அமைப்பில் அவற்றின் தாக்கத்தை புரிந்து கொள்ள உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வு மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறையின் நீர்த் தொழில்நுட்ப முன்னெடுப்பு மற்றும் இங்கிலாந்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.

இதன் மூலம் காவிரி ஆற்றில் ஓடும் நீரின் தரத்தை 2 ஆண்டுகளாக கண்காணித்து, மருந்து தயாரிக்க பயன்படும் ரசாயன பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பிளாஸ்டிக், தீ அணைப்பான்கள், கன உலோகங்கள், பூச்சிக்கொல்லிகள் உள்பட பல வகையான மாசுகள் கலப்பதாக கண்டறிந்து உள்ளனர். அதிலும் மருந்து பொருட்கள் சார்ந்த மாசுகள் அதிகளவில் கலப்பதாக கண்டுபிடித்து இருக்கின்றனர்.

மனிதர்களின் செயல்பாடால் பாதிப்பு

இந்த ஆய்வு குறித்து டாக்டர் லீகி பிலிப், நிதா மற்றும் சென்னை ஐ.ஐ.டி. சிவில் என்ஜினீயரிங் துறை பேராசிரியரும், நிறுவனத் தலைவருமான கே.ஜி.கணபதி ஆகியோர் கூறியதாவது:-

ஆற்றின் முழு நீளத்தில் 22 இடங்களில் இருந்து தண்ணீர் சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நீர்ப்பிடிப்பு தளங்களில் உள்ள நீரின் தரமும் இந்த ஆய்வில் கண்காணிக்கப்பட்டது. உலகெங்கிலும் பல்வேறு மனித செயல்பாடுகளினால் நதி அமைப்புகளின் நீர் தரம் மோசமடைந்து வருகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் மனிதர்களின் செயல்பாடுகளால் காவிரி தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் உள்ள நீர் தரம் மற்றும் மருத்துவ பொருட்களின் மாசின் அளவு மழைக்காலத்தில் தான் அதிகம் பாதிக்கப்படுகிறது. மழைகாலத்துக்கு பின்பு ஆறுகளில் நீர் ஓட்டம் குறைதல் மற்றும் தொடர்ச்சியாக கழிவு வெளியேற்றம் காரணமாக மருந்துகள் உள்பட பல்வேறு வகையான மாசுகள் அதிகரித்துள்ளது. குழுவின் சுற்றுச்சூழல் இடர் மதிப்பீடு, நதிநீர் அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர்வாழ் உயிரினங்களுக்கு மருத்துவ மாசுகள் அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாக கண்டறிந்து இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story