நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்; போலீசாருடன் தள்ளுமுள்ளு


நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்; போலீசாருடன் தள்ளுமுள்ளு
x
தினத்தந்தி 11 Oct 2021 8:52 PM GMT (Updated: 2021-10-12T02:22:42+05:30)

நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி கறம்பக்குடியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 2 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் குரும்பிவயல் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனால் இந்த ஆண்டும் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒரு மாதமாக விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை ஏற்கனவே கொள்முதல் நிலையம் செயல்பட்ட இடத்தில் குவித்து வைத்தனர். ஆனால் குரும்பிவயலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் விவசாயிகள் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள், பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் நேற்று கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இதற்கிடையே கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பஸ்கள் திருமணஞ்சேரி சாலையில் திருப்பி விடப்பட்டன. இதையறிந்த பெண்கள் மற்றும் விவசாயிகள் அங்கு ஓடி சென்றும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்தும் முற்றிலும் முடங்கியது. அப்போது போலீசார் மறியலில் ஈடுபட்ட சில விவசாயிகளை குண்டுகட்டாக தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினர். அப்போது விவசாயிகள் போலீசாருடன் வாக்குவாதம் செய்து தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் மயக்கம் போட்டு கீழே விழுந்தனர். 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். ஒருவர் விஷத்தையும், 4 பேர் பெட்ரோலையும் குடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

இதையடுத்து புதுக்கோட்டை உதவி கலெக்டர் அபிநயா சம்பவ இடத்திற்கு வந்து போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நாளை (இன்று) முதல் வருகிற 23-ந்தேதி வரை குரும்பிவயலில் நெல் கொள்முதல் செயல்படும் என உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story