தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


தமிழகத்தில் 3 ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
x
தினத்தந்தி 12 Oct 2021 11:06 PM GMT (Updated: 12 Oct 2021 11:06 PM GMT)

தமிழகத்தில் கடந்த ஜனவரி முதல் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனவும், இதில் 362 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கண்ணகி நகரில் நேற்று கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தென்சென்னை தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

தமிழகத்தில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த மாதம் 29-ந் தேதி கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பல பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. மேல் சிகிச்சைகள் தேவைப்படுபவர்கள் ஆஸ்பத்திரிகளுக்கு பரிந்துரை செய்து உயர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.

362 பேருக்கு டெங்கு

இந்த முகாம்களில் கொரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 362 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இறந்த டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டதோடு நில்லாமல் தற்போது 4 டாக்டர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அவை வந்தவுடன் முழுமையாக அவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ களப்பணியாளர்களான டாக்டர்கள், நர்சுகளுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கவும் முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

ரூ.87 கோடி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அந்த துறையில் உள்ள அனைவரையும் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். எனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட உண்மையானவர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. இன்னும் ஒரு வாரக்காலத்துக்குள் அப்பணி முடிந்துவிடும். மருத்துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்குவதை முதல்-அமைச்சர் தொடங்கி வைப்பார்.

தற்போது தமிழகத்தில் வெளிப்படை தன்மையுடன் 6 ஆயிரத்து 300 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ‘அவுட் சோர்சிங்’, ஒப்பந்த முறையில் பணியாற்றுகின்றனர். அவர்களை பணி வரன்முறைப்படுத்துவது என்பது இயலாது.

தேசிய நலவாழ்வு குழுமத்தில் பணியாற்றுகிற தற்காலிக பணியாளர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.87 கோடி கூடுதலாக செலவிடப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story