காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு


காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை சாவு
x
தினத்தந்தி 19 Oct 2021 12:48 AM IST (Updated: 19 Oct 2021 12:48 AM IST)
t-max-icont-min-icon

பேச்சிப்பாறையில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 6 மாத குட்டி யானை பரிதாபமாக இறந்தது.

கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கோதையார், மோதிரமலை, குற்றியார் உள்ளிட்ட 15 மலை கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.

மேலும், குற்றியார் பகுதியில் ஆற்று வெள்ளத்தில் தரைப்பாலம் உடைந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் அப்பர் கோதையார் பகுதியில் நேற்றுமுன்தினம் பெய்த பலத்த மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

வெள்ளத்தில் சிக்கிய குட்டியானை

அப்போது, காட்டாற்று வெள்ளத்தில் குட்டி யானை ஒன்று அடித்து செல்லப்படுவதை பேச்சிப்பாறை வனத்துறையினர் கண்டனர். இதையடுத்து அவர்கள் காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட அந்த குட்டியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலையில் பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான கோதைமடக்கு பகுதியில் இறந்த நிலையில் குட்டியானை கிடப்பதை அந்த பகுதி மக்கள் பார்த்தனர். உடனே, இதுபற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரில் இறந்த நிலையில் கிடந்த குட்டியானை பார்வையிட்டனர்.

அப்போது, வெள்ளத்தில் அடித்து வரப்பட்டது 6 மாத குட்டியானை என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து யானையின் உடல் சீரோ பாயின்ட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
1 More update

Next Story