தமிழகத்தில் அரசின் மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக உயர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி


தமிழகத்தில் அரசின் மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக உயர்வு அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 9:12 PM GMT (Updated: 2021-10-23T02:42:38+05:30)

தமிழகத்தில் அரசின் சொந்த மின் உற்பத்தி 3,500 மெகாவாட்டாக உயர்ந்திருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சென்னை,

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமையகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர் எஸ்.சண்முகம் மற்றும் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

3,500 மெகாவாட்டாக உயர்வு

மின்னகத்தில் மீதம் உள்ள 2 சதவீத புகார்களுக்கு விரைந்து துறைவாரியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

பருவமழை காலத்தை எதிர்கொள்ள மின்சார வாரியம் பல்வேறு முன் ஏற்பாடுகளை செய்துள்ளது. குறிப்பாக 93 ஆயிரத்து 881 மின் கம்பங்கள், 19 ஆயிரத்து 826 கி.மீ. மின் கம்பிகள், 4,600 மின்மாற்றிகள், 15 ஆயிரத்து 600 கி.மீ. தாழ்வழுத்த புதைவடங்கள், 50 கி.மீ. அளவிற்கு உயரழுத்த புதைவடங்கள் தற்போது தயார் நிலையில் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வாரியத்தின் நிறுவுதிறன் 4,320 மெகாவாட் ஆகும். இதில் கடந்த கால ஆட்சியில் 1,800 மெகவாட் அளவு தான் உற்பத்தி செய்தார்கள். தற்போது, முதல்-அமைச்சரின் மேலான அறிவுரைகளை பின்பற்றி சொந்த உற்பத்தி தற்போது 3,500 மெகாவாட் அளவிற்கு உயர்ந்துள்ளது.

தவறான மாயை

முதல்-அமைச்சர் தலைமையிலான அரசு நல்லாட்சியினை, மக்களுக்கான ஆட்சியினை நடத்தி வருகிறது. எந்தவித ஆதாரமும், முகாந்திரமும் இல்லாமல் அரசினை குற்றம் சொல்லுவது, அரசின் மீது தவறான மாயையை உருவாக்குவது போன்ற செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

எந்த இடத்திலாவது தவறு ஏற்பட்டிருப்பின் சரியான ஆதாரத்தை அவர்கள் காண்பித்து தவறை நிரூபிக்கலாம். வங்கியில் இருந்து மின்பகிர்மான வட்ட அலுவலகத்திற்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட கணினி எக்சல் சீட்டினை காண்பித்து தவறு ஏற்பட்டுள்ளதாக கூறுவது ஏற்புடையதா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் தினமும் மின்வாரியத்தின் செயல்பாடுகளை கண்காணித்து தமிழ்நாட்டு மக்களுக்கு சிறப்பான மின்சேவையை வழங்க உத்தரவிட்டு மின்சார வாரியம் அதற்கேற்ப பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மக்களுக்கான சேவை செய்வதில் முழுகவனத்தையும் திருப்பி, தவறான, ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதில் அளித்துக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் முதல்-அமைச்சரின் அறிவுரையின்படியும், ஆலோசனையின்படியும் மின்சார வாரியம் சிறப்பான மின் சேவையை தொடர்ந்து வழங்கிவரும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story