கொள்முதல் விலையை நிர்ணயித்து காய்கறி, பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்


கொள்முதல் விலையை நிர்ணயித்து காய்கறி, பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 1 Dec 2021 5:25 AM IST (Updated: 1 Dec 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

கொள்முதல் விலையை நிர்ணயித்து காய்கறி, பழங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக பெய்துவரும் மழையால் காய்கறிக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடும், விலை உயர்வும் இரு வேதனையான உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன. காய்கறி விலை உயர்வு மக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியிருக்கிறது. அதே நேரத்தில் உழவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதுதான் வேதனையளிக்கும் அந்த உண்மைகள்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காலத்தில் தோட்டக்கலைத்துறை உழவர்களிடம் இருந்து காய்கறி மற்றும் பழங்களை கொள்முதல் செய்து மக்களுக்கு மலிவு விலையில் விற்பனை செய்தது. அந்த அனுபவத்தின் உதவியுடன் தோட்டக்கலை துறையால் இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த முடியும்.

இத்தகைய திட்டம் தமிழ்நாட்டிலும் நடைமுறைப்படுத்தப்படும்போது, சந்தையில் விற்கப்படுவதை விட ஐந்தில் ஒரு மடங்கு தொகை மட்டுமே உழவர்களுக்கு கொள்முதல் விலையாக வழங்கப்படும் நிலை மாறும். ஒவ்வொரு காய்கறிக்கும் உறுதி செய்யப்பட்ட விலை கிடைப்பதால், அதிகம் விளையும்போது போதிய விலை கிடைக்காமல் காய்கறிகளை குப்பையில் கொட்டும் நிலையும், அறுவடை செய்யாமல் செடிகளிலேயே வாடவிடும் நிலையும் மாறும். எனவே, தமிழ்நாட்டில் காய்கறி மற்றும் பழங்களுக்கு கொள்முதல் விலை நிர்ணயித்து, அரசே கொள்முதல் செய்யும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story