எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்


எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை உடனே விடுவிக்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2021 8:14 PM GMT (Updated: 2 Dec 2021 8:14 PM GMT)

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து தாமதப்படுத்துவதாகவும், எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனே விடுவிக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

சட்டமன்ற உறுப்பினர்கள், தங்கள் தொகுதிகளில் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு பணிகளைக் கண்டறிந்து அதனை செயல்படுத்துவதற்காக, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-2021-ம் ஆண்டு இந்நிதியினை உயர்த்தி ரூ.3 கோடியாக அறிவித்தது அ.தி.மு.க. அரசு.

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களிலேயே விடுவிக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களிடம் கோரிக்கைகளை நேரடியாகப் பெற்று உடனடியாக, தங்கள் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளை அந்தந்த ஆண்டுக்குள் நிறைவேற்றுவார்கள்.

வெற்றி வாய்ப்பை பாதிக்கும்

இந்த ஆண்டு, டிசம்பர் மாதமே பிறந்து விட்டது. ஆனால், 2021-2022-ம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை தி.மு.க. அரசு இதுவரை விடுவிக்கவில்லை. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளதாகவும், இச்சமயத்தில், தொகுதி மேம்பாட்டு நிதியை விடுவித்தால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் இந்நிதியினை பயன்படுத்தி, தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து விடுவார்கள். இதனால், ஆளும் கட்சியினரின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டுவிடும் என்ற எண்ணத்தில் இதுவரை இந்நிதியினை விடுவிக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளன.

நிதியை உடனே விடுவிக்க வேண்டும்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்திற்குள் விடுவிக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிறந்தும் இந்த தி.மு.க. அரசு இதுவரை விடுவிக்காமல் இருப்பது, இந்த அரசின் தீய எண்ணத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

இத்தகைய செயல்களின் மூலம், தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும், ஆளும் கட்சியினரின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் வெற்றி பெற, தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல் அனைவருக்கும் தெளிவாகத் தெரிகிறது.

எனவே, இனியும் தாமதம் செய்யாமல் 2021-2022-ம் ஆண்டுக்குரிய சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று இந்த தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story