அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுப்பு
x
தினத்தந்தி 3 Dec 2021 3:43 PM IST (Updated: 3 Dec 2021 3:43 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.

சென்னை,

டிசம்பர் 1 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுவில் கட்சி விதிகளில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டு, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி  சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ள வழக்கு கூறியுள்ளதாவது :

ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கட்சியின் நிறுவனர் மற்றும் உறுப்பினர்களின் நோக்கத்திற்கு விரோதமாக இந்த தீர்மானம் அறிவிக்கபட்டுள்ளது. இந்த பதவிகளுக்கான தேர்தல் 7ஆம் தேதி நடத்தப்படும் என 2ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரை தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கின்றனர்.

தேர்தலுக்கு முன்பாக 21 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென்ற விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சங்கங்கள் பதிவுச் சட்டம், அதிமுக கட்சி விதிகள் ஆகியவற்றின் கீழ் தேர்தல் நடத்தும் விதிகளை பின்பற்றாமல் பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுகிறார்கள்.

உறுப்பினர்கள் முறைபடுத்தப்படவில்லை, உறுப்பினர் அட்டை வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. வாக்களிக்க தகுதியான உறுப்பினர்களின் பட்டியல் இதுவரை முறையாக தயாரிக்கப்படவில்லை. தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும், ஐகோர்ட்டு  ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து, 21 நாட்கள் நோட்டீஸ் வெளியிட்டு அதன்பின்னர் தேர்தலை நடத்த வேண்டும்.

2018 பிப்ரவரியில் தன்னை நீக்கிய பிறகு, ஏப்ரலில் தான் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகியோரை கட்சி நிர்வாகிகளாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. எனவே தன்னை நீக்கியது செல்லாது என்ற அடிப்படையில் தனது நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும், மேலும் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும் . ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் இந்தத் தேர்தல் நடத்த வேண்டும் .

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீதான விசாரண இன்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு  வந்தது. அப்போது நீதிபதி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என கூறினார்.

மேலும் இது தொடர்பாக இ.பி.எஸ், ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் பதிலளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story