நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 100 சதவீத வெற்றி பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க 100 சதவீத வெற்றி பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 4 Dec 2021 10:01 PM GMT (Updated: 4 Dec 2021 10:01 PM GMT)

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 100 சதவீத வெற்றி பெற வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பழனியப்பன் தலைமையில்...

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுக்கட்சியினர் 2 ஆயிரம் பேர் நேற்று தி.மு.க.வில் இணைந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

100 சதவீத வெற்றி

தர்மபுரி மாவட்டம் வீக்... வீக்... என்பார்கள். இனிமேல் தர்மபுரி மாவட்டத்தை யாரும் ‘வீக்’ என்று சொல்லக்கூடாது. இனிமேல் யாரும் அவ்வாறு சொல்லவும் மாட்டார்கள். ஏனென்றால் இன்றைக்கு நிலைமை மாறியிருக்கிறது. எனவே அந்த மாறி இருக்கும் நிலைமையை நீங்கள் நன்றாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். விரைவில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

ஏற்கனவே நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல்களில் தி.மு.க. ஏறக்குறைய 60 முதல் 70 சதவீதம் வரையிலான இடங்களில் வெற்றி பெற்றோம். சமீபத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் கிட்டத்தட்ட 99 சதவீத இடங்களில் மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றோம். அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 99 அல்ல நூறு சதவீத வெற்றிபெற வேண்டும் என்ற உணர்வோடு நீங்கள் எல்லாம் ஒரு உறுதி எடுத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள். நிச்சயமாக எனக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது.

குறை சொல்லாத மக்கள்

மழை பாதிப்புகளின்போது எப்போதும் ஆட்சியில் இருப்பவர்களை பார்த்துதான் மக்கள் குறை சொல்வார்கள். ஆனால் இதுவரை நான் சுற்றி வந்திருக்கும் எந்த இடங்களிலும் ஒரு குறை கூட சொல்லவில்லை. நீங்கள் வந்துவிட்டீர்கள். எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. நீங்கள் செய்து கொடுப்பீர்கள். அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்றால் 6 மாத காலத்திற்குள்ளாக, 6 வருடம் இருந்து என்ன செய்ய முடியுமோ அத்தனை காரியங்களையும் நம்முடைய ஆட்சி செய்து இருக்கிறது.

நூற்றுக்கு நூறு சதவீதம் நிச்சயமாக இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி நமக்கு கிடைக்கப் போகிறது. அதில் எந்த மாற்றமும் கிடையாது. எனவே அதற்கு துணைநின்று பணியாற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் நான் மீண்டும் ஒருமுறை தலைவர் கலைஞர் சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story