எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீச்சு 50 பேர் மீது வழக்கு
எதிர்க்கட்சித் தலைவர் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தில் அ.ம.மு.க.வினர் 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று காலை 10 மணிக்கு வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் வரவேற்று அழைத்து சென்றனர்.
அப்போது ஜெயலலிதா நினைவிடத்தின் உள்ளே டி.டி.வி. தினகரனை வரவேற்க காத்திருந்த அ.ம.மு.க.வினர், ‘டி.டி.வி.தினகரன் வாழ்க...’ என்றும், சசிகலா வருகைக்காக காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் ‘சின்னம்மா வாழ்க...’ என்றும் மாறி மாறி கோஷங்கள் எழுப்பியவாறு இருந்தனர். சிலர் ‘எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஒழிக’ என்றும் கோஷங்களை எழுப்பினர்.
இதனை கண்டுகொள்ளாமல் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் அண்ணா சதுக்கம் போலீஸ்நிலையம் வழியாக காரில் ஏறி புறப்பட்டனர். அப்போது திடீரென எடப்பாடி பழனிசாமி காரை அ.ம.மு.க.வினரும், சசிகலா ஆதரவாளர்களும் முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதையடுத்து அ.தி.மு.க.வினர் அரண் போன்று எடப்பாடி பழனிசாமி காரை சுற்றி கொண்டனர்.
பின்னர் அ.தி.மு.க.வினரும், அ.ம.மு.க.வினரும் மாறி மாறி கோஷங்களை எழுப்பினர். இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. திடீரென காலணிகளும் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து இப்பிரச்சினையில் போலீசார் தலையிட்டு எடப்பாடி பழனிசாமி கார் வெளியே செல்ல ஏற்பாடு செய்தனர்.
கடைசியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கார் வந்தது. அப்போது அவரது காரை அ.ம.மு.க. வினர் சூழ்ந்து கொண்டனர்.
அவரது காரை கையால் ‘டமார்..., டமார்..,’ என்று தாக்கினர். இதை கவனித்த அ.தி.மு.க.வினர் ஜெயக்குமார் காருக்கு முன்பு பாதுகாப்புக்காக திரண்டனர். எனினும் அ.ம.மு.க.வினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியவாறு ஜெயக்குமார் சென்ற காரை பின் தொடர்ந்தனர். இதனால் மீண்டும் அ.தி.மு.க. - அ.ம.மு.க.வினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் உண்டாகும் சூழல் நிலவியது. உடனே போலீசார் இருதரப்பினரையும் விலக்கிவிட்டனர். பின்னர் ஜெயக்குமார் கார் வேகமாக புறப்பட்டு சென்றது.
அ.தி.மு.க.-அ.ம.மு.க. வினர் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தால் மெரினா கடற்கரை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்தும்போதும் கூட அ.தி.மு.க.-அ.ம.மு.க. தொண்டர்கள் சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பாக மாறன் என்பவர் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அ.ம.மு.க. கட்சியை சேர்ந்த 50 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story