மீன் விற்பனை செய்யும் பெண் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்; 'என்னை அதிர்ச்சி அடைய வைத்தது’ - மு.க. ஸ்டாலின்


மீன் விற்பனை செய்யும் பெண் பஸ்சில் இருந்து இறக்கிவிடப்பட்ட சம்பவம்;  என்னை அதிர்ச்சி அடைய வைத்தது’ - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 7 Dec 2021 9:47 PM IST (Updated: 7 Dec 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

கன்னியாகுமரி மாவட்ட குளச்சலில் துர்நாற்றம் வீசுவதாக கூறி பெண் மீன் வியாபாரி நேற்று இரவு பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பஸ்சில் இருந்து இறக்கி விடப்பட்டதால் கோபமடைந்த அந்த பெண் பஸ் நிலையத்தில் கத்தி கூச்சலிட்டு நியாயம் கேட்டார். மேலும், நடந்த சம்பவத்தை எடுத்துக்கூறி பஸ் நிலையத்தில் நின்றவர்களிடம் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். பின்னர் கண்கலங்கிய படியே தனது சொந்த ஊருக்கு நடந்தே அந்த பெண் புறப்பட்டு சென்றார். 

இந்த சம்பவம் அரசு பஸ் டிரைவர் மைக்கேல், நடத்துநர் மணிகண்டன், நேர காப்பாளர் ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மீன் விற்பனை செய்து வந்த பெண்ணை பேருந்தில் இருந்து இறக்கிவிட்ட நிகழ்வு அதிர்ச்சியடைய வைத்ததாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், குமரி மாவட்டத்தில், மீன் விற்பனை செய்து வந்த தாய் ஒருவரைப் பேருந்து நடத்துநர் இறக்கிவிட்டதாகக் கூறப்படும் நிகழ்வானது என்னை அதிர்ச்சி அடைய வைத்தது. மகளிர் மேம்பாட்டுக்காகக் கட்டணமில்லா உரிமைச்சீட்டை வழங்கி, அதை நடத்துநர்கள் திறம்படச் செயல்படுத்தி வரும் இக்காலத்தில், ஒரு நடத்துநரின் இச்செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது. எல்லோரும் சமம் என்ற பரந்த உள்ளத்துடன் நம் அனைவரது எண்ணமும் செயலும் அமைய வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.



Next Story