மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்


மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 8 Dec 2021 11:08 PM GMT (Updated: 8 Dec 2021 11:08 PM GMT)

தனியார் மின் வினியோக நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ள மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை,

மின்சார சட்டம்-2003 என்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு மத்திய அரசால் உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை தள்ளி வைப்பதில் நீங்கள் விரைந்து தலையிட வேண்டும் என்பதற்காக இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த சட்ட திருத்தத்தினால் மாநில டிஸ்காம் என்ற வினியோக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.

இந்த சட்ட திருத்தத்திற்கான மசோதா மூலம், மின் வினியோக பிரிவின் உரிமங்களை ரத்து செய்ய வழிவகை செய்வதாக தெரிகிறது. மேலும், வினியோக நிறுவனங்கள் என்பதில் ஒரு கருத்து அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும், எந்தவொரு வினியோக நிறுவனங்களும் விண்ணப்பித்த 60 நாட்களில் பதிவு செய்யப்படுவதற்கு அந்த மசோதா வழிவகை செய்வதாக தெரிகிறது.

தனியாருக்கு லாபம்

இதனால் தனியார் நிறுவனங்கள் மூலம் மின்வினியோகம் நடப்பதில் கட்டுப்பாடற்ற நிலை ஏற்படும். எற்கனவே மின்சார நுகர்வோருக்காக பொதுத்துறை மின்சார நிறுவனங்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை, எந்தவித முதலீடும் இல்லாமல் மின் வினியோகத்திற்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது.

வர்த்தக பகுதிகளில் உள்ள அதிக மின்சார பயன்பாட்டைப் பெறும் வாடிக்கையாளர்களை, புதிய தனியார் நிறுவனங்கள் தனியாக பிரித்தெடுத்துக்கொள்ளும் நிலை ஏற்படக்கூடும். இதனால், சமூக சிந்தனை இல்லாமல், லாப நோக்கம் ஒன்றையே முன்வைத்து, அதற்கேற்ற முறைகளை வகுத்துக்கொள்ளும் உரிமை தனியார் நிறுவனங்களுக்கு கிடைக்கும்.

மேலும், மாநில பொதுத்துறை மின் பயன்பாடுகள் அனைத்தும், மானியம் பெறும் நுகர்வோருக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும், ஊரகப் பகுதிகளுக்கும் சேவையாற்றுவதற்கு மட்டுமே தள்ளப்படும்.

மறைமுக கட்டுப்பாடு

மின்சார சட்டத்தின் 26, 28, 32 ஆகிய பிரிவுகளை திருத்துவதன் மூலம் தேசிய மின் தொகுப்பு வினியோக மையத்திற்கே (என்.எல்.டி.சி.) அதிகாரம் அளிக்கப்படுகிறது. இது தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் எஸ்.எல்.டி.சி. மையம் அல்லது மின்சார வினியோக நிறுவனங்கள் அல்லது மாநில அரசு ஆகியவற்றின் மின்சாரம் தொடர்பான செயல்பாடுகளை மறைமுகமாக கட்டுப்படுத்த வழி வகுக்கும்.

விதிகளை மீறுவதற்காக சட்டப்பிரிவு 142-ன் கீழ் விதிக்கப்படும் தண்டனையும் கடுமையாக உள்ளது. எப்படியென்றாலும், புதுப்பிக்கத்தக்க கொள்முதல் நிலைப்பாடுகளை பூர்த்தி செய்ய முடியாது. எனவே மின்சார திருத்த சட்டம்-2021 மசோதாவை திரும்பப்பெறுவதில் நீங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும். மக்களுக்கு தகுந்த விலையில் மின்சார வினியோகத்தை மாநில அரசுக்கு சொந்தமான வினியோக உரிமைதாரர்களே தொடர அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story