போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆய்வக உதவியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ளஆய்வக உதவியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Dec 2021 4:24 AM IST (Updated: 11 Dec 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வக உதவியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அளவில் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்புகளை தமிழக படித்த இளைஞர்களுக்கு வழங்க தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள், அம்மா உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் என்ற வரிசையில் தற்போது கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்களை பணியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கையை தி.மு.க. அரசு எடுத்திருக்கிறது.

போராட்டம்

கொரோனா தொற்று முதல் அலையின்போது, 2020-ம் ஆண்டு மூக்கு மற்றும் தொண்டை பகுதி ஆகிய இரண்டில் இருந்து சுரக்கும் நீரை சேகரிப்பதற்காக தமிழகம் முழுவதும் ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில், திடீரென்று கடந்த நவம்பர் 30-ந் தேதி சுகாதாரத்துறை துணை இயக்குனர், டிசம்பர் 1-ந் தேதி முதல் பணிக்கு வர தேவை இல்லை என்று ஆய்வக உதவியாளர்களுக்கு தெரிவித்துள்ளார். இதனை எதிர்த்து 150 ஆய்வக உதவியாளர்கள் சென்னையில் உள்ள மருத்துவ பணிகள் இயக்ககத்தின் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

கொரோனா தொற்று முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்ற அறிவிப்பினை மத்திய அரசு அறிவிக்காத நிலையில், தமிழக அரசு எந்தவித கால அவகாசமும் தராமல் உடனடியாக பணியில் இருந்து விடுவிப்பதும், 4 மாதங்களுக்கான ஊதியத்தை தராமல் இருப்பதும் கண்டிக்கத்தக்கது.

எனவே முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, போராடுகின்ற தற்காலிக ஆய்வக உதவியாளர்களை அழைத்து பேசி, அவர்களுடைய கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றவும், அவர்களுக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story