சேலத்தில் நமக்கு நாமே, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்


சேலத்தில் நமக்கு நாமே, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை தொடங்கி வைத்த மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 12 Dec 2021 5:10 AM IST (Updated: 12 Dec 2021 5:10 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், நமக்கு நாமே, நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், 31 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டங்களையும் அவர் வழங்கினார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

நலத்திட்ட உதவிகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில், “நமக்கு நாமே திட்டம்” மற்றும் “நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்” ஆகிய புதிய திட்டங்களை தொடங்கி வைத்து, ரூ.38 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்து, ரூ.54 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 30,837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.168 கோடியே 64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ரூ.15 கோடி கட்டிடங்கள்

இதுதவிர ரூ.15.03 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதேபோல், ஓமலூரில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மைய கட்டிடம், மேட்டூரில் ரூ.3.19 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வட்டார போக்குவரத்து அலுவலக கட்டிடம், சந்தியூரில் ரூ.1.98 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை மண்டல இணை இயக்குனர்அலுவலகக் கட்டிடம், தலைவாசல் வட்டம், மும்முடி கிராமத்தில் ரூ.1.01 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சார்-பதிவாளர் அலுவலக கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

83 திட்டப்பணிகள் முடிவு

மேலும், நாழிக்கல்பட்டி, கரியகோவில், கடம்பூர், வெள்ளையூர், உமையாள்புரம் ஆகிய இடங்களில் ரூ.2.16 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தக கட்டிடங்கள், சேலம் மேற்கு வருவாய் வட்டாட்சியருக்கு ரூ.28.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்பு கட்டிடம் என மொத்தம், ரூ.38 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டிலான 83 முடிவுற்ற திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

அடிக்கல் நாட்டினார்

எடப்பாடி வட்டம், கோனேரிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.1.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மருத்துவ அலுவலர்களுக்கான குடியிருப்புகள், பெத்தநாயக்கன்பாளையத்தில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடம், 14 வட்டாரங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் ரூ.3.29 கோடி மதிப்பீட்டில் 1 லட்சத்து 450 மரக்கன்றுகள் நடும் பணிகள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இதேபோல், ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் நகர்புற ஆரம்ப சுகாதார மையத்திற்கு கூடுதல் கட்டிடம் மற்றும் மயானத்தில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

எரிவாயு தகன மேடைகள்

பேரூராட்சிகளில் ரூ.40.55 கோடி மதிப்பீட்டில் சாலைகள், பாலங்கள், எரிவாயு தகன மேடைகள் மற்றும் வார சந்தை அமைக்கும் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

மேலும், ஆத்தூர் மற்றும் மேட்டூர் நகராட்சிகளில் ரூ.5.14 கோடி மதிப்பீட்டில் சாலைப் பணிகள் என மொத்தம் ரூ.54 கோடியே 1 லட்சம் மதிப்பீட்டிலான 60 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

அரசு நலத்திட்ட உதவிகள்

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் பொருளாதாரத்தில் நலிவடைந்த 37 பயனாளிகளுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணை, பட்டுவளர்ச்சித்துறை சார்பில் 283 பயனாளிகளுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் மல்பெரி நடவு செய்ய ஊக்கத்தொகை, தனி புழு வளர்ப்புக்கு உதவித்தொகை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 62 பயனாளிகளுக்கு ரூ.3.34 லட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை, விலையில்லா சலவைப்பெட்டிகள் என நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டத்தின் கீழ் மானியத்திற்கான ஆணை மற்றும் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் ஒப்புகை ஆணை, 1,000 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் என மொத்தம் 30 ஆயிரத்து 837 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.168 கோடியே 64 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சு.முத்துசாமி, டாக்டர் மா.மதிவேந்தன், என்.கயல்விழி செல்வராஜ் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பா.பொன்னையா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story