சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்


சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன? விசாரணைக்கு உத்தரவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 14 Dec 2021 3:50 AM IST (Updated: 14 Dec 2021 3:50 AM IST)
t-max-icont-min-icon

நடப்பாண்டில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள 47 சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணம் குறித்த விவரங்களை மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலான7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் ரூ.3,421 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக மந்திரி நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

இது கடந்த ஆண்டு முழுவதும் வசூலிக்கப்பட்ட சுங்கக்கட்டணமான ரூ.3,875 கோடியில் இது 90 சதவீதத்திற்கும் அதிகமாகும். கடந்த 5 ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் சுங்கக்கட்டண வசூல் உயராமல் நிலையாக இருந்த நிலையில், இந்த உயர்வு வியக்கத்தக்கது. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக்கட்டண உயர்வு, தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு களைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதற்கு காரணம் போக்குவரத்து அதிகரித்ததோ, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டதோ அல்ல. மாறாக, சுங்கக்கட்டண சுரண்டல் கிட்டத்தட்ட தடுக்கப்பட்டிருப்பதுதான்.

காரணம் என்ன?

2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ந் தேதி வரை சுங்கக்கட்டணம் பணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அதில் பெரும்பகுதி கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முதல் பாஸ்டாக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், அதை மறைக்க முடியாது. அதனால் தான் நடப்பாண்டில் சுங்கக்கட்டண வசூல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. இதன் பொருள் கடந்த ஆண்டில் சுமார் 51 சதவீதமும், அதற்கு முந்தைய ஆண்டில் சுமார் 72 சதவீதமும் சுங்கக்கட்டணம் சுரண்டப்பட்டிருக்கிறது என்பது தான்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக ரூ.732 கோடி மட்டுமே சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் அதைவிட ரூ.243 கோடி அதிகமாக ரூ.975 கோடி வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ஒவ்வொரு சாலைக்கும் ஒரு கணக்கு உள்ளது. இது இயல்பானது அல்ல. கடந்த ஆண்டு களை விட நடப்பாண்டில் சுங்கக்கட்டண வசூல் அதிகரித்ததற்கான காரணம் என்ன?.

விசாரணை

கடந்த ஆண்டுகளில் சுங்கக்கட்டண வசூல் மறைக்கப்பட்டதா? என்பன போன்ற வினாக்களுக்கு அதிகாரபூர்வ விடை காணும் வகையில் சுங்கக்கட்டண வசூல் குறித்து அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். விசாரணை முடிவடையும் வரை, 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் சாலைகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story