மகளிர் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு சுயஉதவி குழு கலந்துரையாடலில் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை


மகளிர் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு சுயஉதவி குழு கலந்துரையாடலில் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 15 Dec 2021 1:35 AM IST (Updated: 15 Dec 2021 1:35 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் திட்டத்தில் திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு வேண்டும் என்று சுயஉதவி குழு கலந்துரையாடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருநங்கை ஒருவர் கோரிக்கை விடுத்தார்.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று நடந்த அரசு விழாவில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் சுயஉதவி குழுவினருடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

பெருமகிழ்ச்சி

மு.க.ஸ்டாலின்:- உங்கள் சுயஉதவி குழு சார்பாக என்னென்ன பொதுப்பணி செய்துகொண்டிருக்கிறீர்கள்?

மாவட்ட கவுன்சிலர் (சிவகங்கை மாவட்டம்) ஸ்டெல்லா:- மகளிர் குழுவின் சார்பாக நிறைய செயல்பாடுகள் செய்திருக்கிறோம். கொரோனா காலங்களில் உதவிகள் அதிகமாக செய்திருக்கிறோம். அரிசி, பருப்பு போன்றவை கொடுத்திருக்கிறோம். கொரோனா காலங்களில் மக்கள் வங்கி கடன் கட்டமுடியாமல் இருந்த சூழ்நிலையில் நீங்கள், வங்கி கடனை தள்ளுபடி செய்த அந்த தருணம் எங்களுக்கு பெருமகிழ்ச்சியை தந்தது.

விழிப்புணர்வு

மு.க.ஸ்டாலின்:- பழங்குடியின மக்களுக்கு நீங்கள் சுயஉதவி குழு சார்பாக என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?.

நீலகிரி மாவட்டம் தோடா பழங்குடியின வகுப்பை சேர்ந்த பெண் ஆஷா:- நாங்கள் சுகாதாரத்துறையுடன் இணைந்து எல்லா பகுதிகளுக்கும் சென்று, இந்த கொரோனா காலத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம்.

திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு

மு.க.ஸ்டாலின்:- திருநங்கைகள் நல்வாழ்வுக்கு புதிதாக இந்த அரசுக்கு ஆலோசனை சொல்ல விரும்புகிறீர்களா?

திருநங்கை வசந்தி:- இப்பொழுது படித்த திருநங்கைகள் அதிகம் இருக்கிறார்கள். மகளிருக்கு பஸ் வசதி செய்து கொடுத்தது போல திருநங்கைகளுக்கும் செய்து கொடுத்திருக்கிறீர்கள். அதுபோல மகளிர் திட்டத்தில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இருப்பதுபோல, திருநங்கைகளுக்கும் வேலைவாய்ப்பு கொடுத்தீர்கள் என்றால் மிகவும் நன்றாக இருக்கும். நாங்களும் வாழ்க்கையில் முன்னேறுவோம். இப்பொழுது உள்ள திருநங்கைகளுக்கும் அடுத்து வருகிற திருநங்கைகளுக்கும் நாங்கள் வழிகாட்டியாக இருப்போம்.

மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு

மு.க.ஸ்டாலின்:- உங்கள் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் எந்த அளவுக்கு துணையாக இருக்கிறார்கள்? எந்த அளவுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள்? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.

காந்திமதி:- சுயஉதவி குழுக்கள் ஏற்கனவே வெளியில் வராத மக்களை இன்றைக்கு வெளியில் வந்து சுயஉதவி குழுக்களுக்கு நம்முடைய தமிழக அரசும், முதல்-அமைச்சராலும் நிறைய கடன்களை பழைய ஆட்சியிலே 10 வருடத்திற்கு முன்னாள் சுழல் நிதி கடன்களும், பொருளாதார கடன்களும் அதிகமாக வாங்கினோம். அதன் மூலமாக நிறைய தொழில்களை செய்து இன்றைக்கு முன்னேற்றமான நிலைக்கு வந்து ஒவ்வொரு குடும்பமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை சம்பாதிக்கும் அளவுக்கு தன்னுடைய குடும்பத்தை தானாகவே நிர்வகிக்கும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்றால், இதற்கு முக்கியமான காரணம் தமிழக அரசும், முதல்-அமைச்சருமே காரணம் என்று கூறிக்கொள்ளலாம்.

அதோடு மட்டுமல்லாமல், எங்களுடைய மகளிர் குழுக்களுக்கு நிறைய கடனுதவியை செய்துள்ளார். தற்சமயம், குழுக்களுக்கு கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்து, கொரோனா காலத்தில் அனைத்து மகளிருடைய வறுமையையும் நீக்கியுள்ளார்கள் என்பதை பெருமையோடு கூறிக்கொள்கிறோம்.

இலவச தையல் பயிற்சி

மு.க.ஸ்டாலின்:- இணையவழி சந்தையை எப்படி கிராமங்களில் பிரபலப்படுத்தினீர்கள்? அந்த அனுபவத்தை சொல்லுங்கள்.

நசிமா:- பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் பயிலகம் என்று தையல் பள்ளியை ஆரம்பித்தோம். நாங்கள் தைத்து கொடுப்பது மட்டுமல்லாமல், சுற்றுவட்டார கிராமங்களில் வாழ்வாதாரம் இல்லாத பெண்களை கண்டுபிடித்து அவர்களுக்கு இலவசமாக தையல் பயிற்சி கொடுத்தோம்.

நாளடைவில் அவர்களுக்கு தொழில்முறை பயிற்சி கொடுத்து எங்கள் கடையிலேயே அவர்களுக்கு ஒரு வேலைவாய்ப்பு கொடுத்து, மகாபலிபுரத்தில் பெண்கள் நாங்கள் ஒரு குழுவாக இவ்வளவு பெரியதாக உருவாகியிருப்பதால் தானாகவே நாங்கள் பிரபலமாக இருக்கிறோம். ஏனென்றால், எங்களுடைய பயிலகம்தான் பெண்களுக்காக நடத்தப்படும் பயிலகம், மகளிர் குழுவாக மகளிர் குழுவால் வெற்றிகரமாக நடத்தி கொண்டிருக்கிறோம்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story