மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு: ரூ.2,750 கோடி கடன் உதவி - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு: ரூ.2,750 கோடி கடன் உதவி - மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 15 Dec 2021 4:41 AM IST (Updated: 15 Dec 2021 4:41 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணியில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா நேற்று நடந்தது. இதில் 7½ லட்சம் பெண்கள் பயன்பெறும் வகையில் ரூ.2 ஆயிரத்து 750 கோடி கடன் உதவி வழங்கும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களின் மேம்பாட்டிற்காக கடன் உதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

ரூ.2,750 கோடி கடன் உதவி

இந்த அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு சுழல் நிதி வழங்கும் பிரமாண்ட விழா திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் நேற்று நடந்தது.

இதில் தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 750 கோடி அளவிலான கடன் உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தன்னம்பிக்கை

பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர் சொந்த காலிலே நிற்க வேண்டும். அவர்களுக்கு தன்மானத்தோடு வாழக்கூடிய அளவுக்கு தன்னம்பிக்கையை தந்தாக வேண்டும். அந்த அடிப்படையில்தான் கருணாநிதி மகளிர் சுயஉதவி குழுவை தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 58 ஆயிரத்து 463 சுயஉதவி குழுக்களை சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு ரூ.2 ஆயிரத்து 750 கோடி அளவுக்கு கடனுதவியும், நலத்திட்ட உதவிகளும் கிடைக்க இருக்கிறது. இதை நல்லவகையில் பயன்படுத்தி சிறப்பு பெற வேண்டும்.

இந்தியாவிலேயே முதன் முதலாக பெண்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு அடித்தளம் அமைத்த ஆட்சிதான் கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க.வின் ஆட்சி. தி.மு.க. ஆட்சியில்தான் இந்த குழுக்கள் உருவாக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் முதன் முதலில் தொடங்கியிருந்தாலும், அதைத்தொடர்ந்து சேலம், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அடுத்து வந்த ஆட்சி இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. நான் அரசியலாக்க விரும்பவில்லை. 1996-ம் ஆண்டு மீண்டும் கருணாநிதி முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகுதான் 14 மாவட்டங்களில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டன.

சுழல் நிதி

முதலில் 5 ஆயிரத்து 177 சுயஉதவி குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 7 மாவட்டங்களில் 6 ஆயிரத்து 14 மகளிர் சுயஉதவி குழுக்களும், அதற்கு அடுத்த ஆண்டில் 8 மாவட்டங்களில் 15 ஆயிரத்து 29 சுய உதவி குழுக்களும் உருவாக்கப்பட்டது. இப்படியே அது வளர்ந்தது. 2006-ம் ஆண்டு நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஆயிரக்கணக்கு என்பது லட்சக்கணக்கு ஆனது. தமிழகம் முழுவதும் தற்போது 7.22 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள்.

இத்தனை லட்சம் குழுக்கள் செயல்படுகிறது என்றால், ஒரு கோடிக்கும் அதிகமான மகளிர் இதில் இயங்கி வருகிறார்கள். அதற்கு விதை போட்டவர் கருணாநிதி. அதனால்தான் மகளிர் நலம் காத்த மாண்பாளர் என்று அவரை இன்றைக்கும் போற்றிக்கொண்டிருக்கிறோம். மகளிரை ஒருங்கிணைக் கிறோம். கடன் கொடுக்கிறோம். அதை அவர்கள் திருப்பி கட்டு கிறார்கள். இது ஏதோ ஒரு வழக் கமான திட்டம் என்று நினைக்கக்கூடாது. எத்தனையோ கடன் கொடுக்கும் திட்டத்தைப்போல இதுவும் ஒரு திட்டம் என்று சொல்லமுடியாது. இந்த திட்டத்தின் மகுடமாக இருப்பது சுழல் நிதி. பெண்கள், பொருளாதாரத்தில் தலைநிமிர்ந்து நிற்க தூண்டுதலாகவும், அடிப்படையாகவும் சுழல் நிதி அமைந்துள்ளது.

ரூ.20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு

இந்த நிதி ஆண்டில் மட்டும் 17 ஆயிரத்து 479 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.87.39 கோடி சமுதாய முதலீட்டு நிதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி, நலிவுற்றோர் கண்டறியப்பட்டு 5 ஆயிரத்து 838 சங்கங்கள் மூலமாக ரூ.14.59 கோடி இந்த நிதி ஆண்டில் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 36 லட்சத்து 97 ஆயிரத்து 59 குழுக்களுக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி கடன் தர இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இதுவரை ரூ.6 ஆயிரத்து 777 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த தொகை ரூ.10 ஆயிரம் கோடி ஆகிவிடும். அடுத்த ஆண்டுக்குள் அடுத்த ரூ.10 ஆயிரம் கோடி இலக்கை எட்ட உத்தரவிட்டுள்ளேன். சிறப்பு முகாம்கள் அமைத்து கடன் வழங்குவதை துரிதப்படுத்தவும் கேட்டுக்கொண்டுள்ளேன்.

ரூ.10 முதல் ரூ.20 லட்சம் வரை சொத்து பிணையம் இல்லாமல் கடன் வழங்க குறுந்தொழில் கடன் உத்தரவாத நிதியும் வழங்கப்பட்டு வருகிறது. இப்படி ஏராளமான திட்டங்கள் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தலை சந்திப்பதற்கு முன்பு சொன்ன உறுதிமொழிகளை முழுமையாக நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்லவில்லை. படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். ஆனால் நிறைவேற்றமுடியாமல் விட்டுவிடமாட்டோம். அனைத்தையும் நிச்சயமாக, உறுதியாக நிறைவேற்றியே தீருவோம். மகளிர் மேம்பாடு மூலமாக அவர்களது குடும்பமும், அந்த குடும்பத்தின் மூலமாக சமூகமும் மேம்பாடு அடையும். சமூக மேம்பாட்டில் தான் இந்த மாநிலத்தின் மேம்பாடு அடங்கி இருக்கிறது.

உதவிகள் தொடரும்

திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கையில் ஒன்று பெண்ணுரிமை, மகளிர் மேம்பாடு என்பதாகும். பெண்களின் உரிமைக்கான புரட்சிகர சீர்திருத்தத்தை நூற்றாண்டுக்கு முன்பே முழங்கிய இயக்கம்தான் திராவிட இயக்கம். அத்தகைய தலைவர் தான் தந்தை பெரியார். அவர் வழி வந்த தி.மு.க., மகளிருக்கான ஏராளமான திட்டங்களை தீட்டி உள்ளது. சொத்தில் பெண்களுக்கு சம உரிமை. பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீதம் இடஒதுக்கீடு என்பது உள்பட பெண்களின் முன்னேற்றத்துக்காக எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம்.

முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற அன்றே மகளிருக்கு கட்டணமில்லாத பஸ் பயணத்துக்கு உத்தரவிட்ட கைதான் இந்த கை. 5 பவுனுக்கு கீழ் அடமானம் வைக்கப்பட்டு பெற்ற கடனை ரத்து செய்தோம். மகளிர் சுயஉதவி குழுக்கள் வாங்கிய கடன்கள் ரூ.2 ஆயிரத்து 756 கோடி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அந்த வரிசையில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு கடன் வழங்கியிருக்கிறோம். இதன் மூலமாக தொழில் முனைவோர்களாக மட்டுமல்ல, தன்னம்பிக்கை உள்ளவர்களாகவும் அனைத்து மகளிரும் உயரவேண்டும்.

அப்படி வாழ்வதற்கான, உயர்வதற்கான அனைத்து உதவிகளையும் நம்முடைய ஆட்சியின் மூலமாக இவைகள் எல்லாம் தொடரும், தொடரும் என்ற உறுதி கூறுகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலந்து கொண்டோர்

விழாவில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், சா.மு.நாசர், எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி., ச.சந்திரன் எம்.எல்.ஏ., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மரியம் பல்லவி பல்தேவ், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட அளவிலான வங்கிகள் கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குனர் பர்த பிரதிம் சென்குப்தா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story