2 மணி நேரத்தில் பரவும் ஒமைக்ரான்: வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாய பரிசோதனை செய்ய அனுமதி...!
வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு கட்டாய பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை,
ஒமைக்ரான் வைரஸ் 2 மணி நேரத்துக்குள் வேகமாக பரவும் தன்மை கொண்டதால், அனைத்து வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு கட்டாய பரிசோதனை செய்ய அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் மத்திய சுகாதாரத்துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:-
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்களில்70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 28 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 4 பேர் மட்டுமே பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்கள். மீதமுள்ள 24 பேர் குறைவான பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வந்தவர்களாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகவும் உள்ளனர்.
ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட ஒருவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு 48 மணி நேரத்தில் ஒமைக்ரான் அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து வைரஸ் தொற்று இன்னொருவருக்கு 2 மணி நேரத்துக்குள் மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பேரிடர் சூழலை உருவாக்கும் நிலை உள்ளது. தற்போது வரை ஒமைக்ரான் பாதிப்புள்ள இங்கிலாந்து உள்ளிட்ட அதிக ஆபத்தான நாடுகளில் இருந்து வருபவர்களுக்குதான் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
ஆனல் ஆபத்தில்லாத நாடுகளில் இருந்து வருவோருக்கு எந்த வித தீவிர கட்டுப்பாடுகளும் இல்லாமல் உள்ளது. மேலும், அவர்களில் வெறும் 2 சதவீதம் பேருக்கும் மட்டுமே கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதனால், ஒமைக்ரான் பரவலை தடுக்க முடியாது.
எனவே அனைத்து வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பயணிகளையும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்த மத்திய சுகாதாரத்துறை அனுமதிக்க வேண்டும்.
அதேபோல், கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என முடிவு வந்தால் மட்டுமே விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுதிக்க வேண்டும். ஒரு விமானத்தில் இருந்து மற்றொரு விமானத்துக்கு மாறுவதாக இருந்தால் கூட தொற்று இல்லை என்ற முடிவு அவசியமாக இருக்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு தொற்று இல்லை என்றால் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்ட பின் 8-வது நாள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் தொற்று உறுதியானால் ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி சிகிச்சை வழங்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story