தமிழக பாட புத்தகங்களை நமது மாநிலத்திலேயே அச்சடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை


தமிழக பாட புத்தகங்களை நமது மாநிலத்திலேயே அச்சடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை
x
தினத்தந்தி 21 Dec 2021 11:53 PM IST (Updated: 21 Dec 2021 11:53 PM IST)
t-max-icont-min-icon

வெளிமாநிலங்களுக்கு ‘டெண்டர்’ கூடாது: தமிழக பாட புத்தகங்களை நமது மாநிலத்திலேயே அச்சடிக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு கே.எஸ்.அழகிரி கோரிக்கை.

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 8 கோடி புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒவ்வொரு ஆண்டும் அச்சிட்டு வழங்குகிறது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு உலகளாவிய ‘டெண்டர்’ கொண்டு வந்ததையடுத்து, அச்சிடும் ஆர்டர்களை தமிழக அச்சகத்தினர் இழக்கும் ஆபத்து ஏற்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு வெளிமாநிலங்களின் அச்சகத்தாருக்கு 50 சதவீதமும், தமிழக அச்சகத்தாருக்கு 50 சதவீதமும் ‘டெண்டர்’ வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் தமிழத்தில் உள்ள புத்தகம் அச்சிடும் அச்சகங்கள் மூடும் நிலைக்கு ஆளாகியுள்ளதாகவும் புத்தகம் அச்சிடுவோர் சங்கமும், பைண்டர்ஸ் சங்கமும் அச்சம் தெரிவித்துள்ளன.

ஆந்திரம், தெலுங்கானா, கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்கள், பாடநூல்களை தங்கள் மாநிலத்திலேயேதான் அச்சடிக்கின்றன. பிற மாநிலங்களுக்கு வழங்குவதில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள பாடப்புத்தக அச்சகங்களின் கோரிக்கையின் நியாயத்தை ஏற்று, தமிழகத்தில் மட்டுமே பாடநூல்களை அச்சிடும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் விரைவில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்டை மாநிலங்களில், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த அச்சகங்கள் மட்டுமே அரசின் டெண்டர் பட்டியலில் உள்ளன. தமிழ்நாட்டு அச்சகங்கள் பங்கு பெற முடியாது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டுமே, பிற மாநில அச்சகங்களும் பங்கேற்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. இதனால், தமிழ்நாட்டு அச்சுக்கூடங்கள் பாதிக்கப்படுகின்றன.

எனவே, தமிழ்நாடு அரசு இந்த பிரச்சினையில் தலையிட்டுத் தீர்வுகாண வேண்டும். சிறு குறு அச்சுத் தொழிற்கூடங்களைப் பாதுகாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Next Story