நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி


நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதி 2 வாலிபர்கள் பலி
x
தினத்தந்தி 25 Dec 2021 6:19 PM IST (Updated: 25 Dec 2021 6:19 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் அரசு ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர், ஒருவர் படுகாயமடைந்தார்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காமேஷ் பாண்டியராஜன்(26), கேரளாவைச் சேர்ந்தவர் நிஜோமோன்(21). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றில் மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வந்தனர். வடிவீஸ்வரம் தளவாய் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்(24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் மூவரும் நண்பர்கள். 

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 3 பேரும், நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலுள்ள டீக்கடைக்கு டீ அருந்துவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். தமிழ்ச்செல்வன் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். டீக்கடையில் டீ குடித்து விட்டு வீட்டுக்கு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது தூத்துக்குடியில் இருந்து மார்த்தாண்டம் செல்லும் அரசுப் பேருந்து ஒன்று வடசேரி பேருந்து நிலையத்துக்குள் வந்தது. பேருந்து டிரைவர் ஒரு வழிப்பாதையில் வந்ததால் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது அரசுப்பேருந்து மோதியது. இதில் காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வன், நிஜோமோன் ஆகிய 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த 3 பேரையும்  மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி காமேஷ் பாண்டியராஜன், தமிழ்ச்செல்வன் ஆகியோர் உயிரிழந்தனர். நிஜோமோனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து நாகர்கோவில் போக்குவரத்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story