தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்


தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 28 Dec 2021 4:39 AM IST (Updated: 28 Dec 2021 4:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்துக்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்புகளை சரி செய்வதற்காக இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கடந்த நவம்பர் மாத மத்தியில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், மத்திய அரசு தரப்பில் இருந்து இடைக்கால நிதியுதவி எதுவும் வழங்கப்படவில்லை.

மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தது. அப்போது தமிழகத்திற்கு மழை மற்றும் வெள்ள நிவாரணமாக ரூ.4,626 கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் ஒரு மாதத்திற்கு மேலாகியும் மத்திய அரசிடம் இருந்து வெள்ள நிவாரண நிதி தொடர்பாக சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

அதைவிட கவலை அளிக்கும் விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மழை-வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த மத்திய குழு அதன் அறிக்கையைக் கூட மத்திய அரசிடம் தாக்கல் செய்ததாக இன்னும் தகவல் இல்லை. தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் உயர்நிலை குழுவை டெல்லிக்கு அனுப்பி தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நிதியை விரைவாக பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் நிதியுதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story