பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்காததால் தி.மு.க. அரசு மீது மக்கள் கோபம் எடப்பாடி பழனிசாமி அறிக்கை


பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்காததால் தி.மு.க. அரசு மீது மக்கள் கோபம் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
x
தினத்தந்தி 30 Dec 2021 5:25 AM IST (Updated: 30 Dec 2021 5:25 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கியதுபோல பொங்கல் பரிசு ரூ.2 ஆயிரத்து 500 வழங்காததால் தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, மக்களை ஏமாற்றி தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியை பிடித்தது. மக்களுக்கு பயன் அளிக்கக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளை இந்த விடியா அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க.வின் சார்பில் பலமுறை அறிக்கைகள் வாயிலாகவும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வலியுறுத்தினோம்.

ஆனால், தேர்தலின்போது வாய்க்கு வந்தவாறு அறிவித்த வாக்குறுதிகளில், தமிழக மக்களுக்கு பொருளாதார ரீதியாக பயன் அளிக்கக்கூடிய குறைந்தபட்ச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முதல் அடியைக்கூட இந்த அரசு இதுவரை எடுத்து வைக்கவில்லை. விடியலை தருவோம் என்று சொல்லி முதல்-அமைச்சரான மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 2021-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜெயலலிதாவின் அரசு வழங்கிய பொங்கல் பரிசான ரூ.2 ஆயிரத்து 500 வழங்காதது, ஏழை-எளிய, நடுத்தர மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

ஜி.எஸ்.டி. வரிக்குள்...

இந்நிலையில், தி.மு.க.வின் நாடாளுமன்ற குழுத்தலைவரும், கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வர முடிவு செய்ததாகவும், இதற்காக மாநில அரசுகளின் நிலைப்பாட்டை கேட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. இதற்கு பெரும்பாலான மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசும், மேற்கு வங்க அரசும் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பதாக மத்திய நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

டிஆர். பாலு, பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்த நிலையில், தேர்தல் சமயத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்ற விடாமல் தடுப்பது எது? என்பதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களுக்கு பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story