கனமழை எதிரொலி: சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு..!
சென்னையில் பெய்துவரும் கனமழையால், மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
சென்னையில் இன்று காலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில், பிற்பகலில் இருந்து இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் பல மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியதால் வாகன ஒட்டிகள் அவதியுற்றனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
தொடர் மழை பெய்துவருவதால், மின் வினியோகம் தடைபட்டுள்ள நிலையில், சாலைகளில் சிக்னல்கள் இயங்காத காரணத்தினால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகளில் தேங்கியுள்ள மழை நீர், மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பஸ்கள் வர தாமதமாவதால், மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில்நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருந்து ரெயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
சென்னையில் மேலும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பயணிகள் பாதுகாப்பாக தங்கள் வீடுகளுக்கு செல்லும் பொருட்டு மெட்ரோ ரெயில் சேவை ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக 11 மணியுடன் முடிவடையும் மெட்ரோ ரெயில் சேவை மக்கள் சந்தித்துவரும் இடையூறுகளை கருத்தில் கொண்டு ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டு நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story