‘எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டு தொகுப்பு' கவர்னர் உரை குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து + "||" + O. Panneerselvam comments on the Governor's text 'A collection of useless myths'
‘எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டு தொகுப்பு' கவர்னர் உரை குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து
கவர்னர் உரை, எதற்கும் உதவாத கட்டுக்கதைகளின் கூட்டு தொகுப்பு என்று ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப கவர்னர் உரையில் ஏதாவது இருக்கிறதா என்று நானும் ஆராய்ந்து பார்த்தேன். ஆனால் அதற்கான விடை பூஜ்ஜியம்தான். தடுப்பூசி செலுத்த ஆரம்பிக்கப்பட்டபோது தடுப்பூசிக்கு எதிராக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் விஷம பிரசாரம் செய்ததன் விளைவாக பொதுமக்களிடையே தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் இருந்தது. இதையும் மறைத்து தி.மு.க. சாதனை செய்தது போல கவர்னர் உரையில் காண்பிக்கப்பட்டுள்ளது நகைப்புக்குரியதாக உள்ளது.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்ததற்கு காரணமே தி.மு.க.வும், அதன் இரட்டை வேடமும்தான்.
மக்களிடம் அதிருப்தி
கவர்னர் உரையில் ‘நீட்' போன்ற நுழைவுத்தேர்வுகள் தேவையற்றன என்ற இந்த அரசின் நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டு இருக்கிறது.
அடுத்த கவர்னர் உரையில் இதுவும் இடம் பெறாது. ஆக ‘நீட்' தேர்வு ரத்து என்பது ஒரு ஏமாற்று வேலை என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. தி.மு.க. ஆட்சி வருவதற்கு அடித்தளமாக இருந்த வாக்குறுதிகள் குறித்து கவர்னர் உரையில் எதுவும் தெரிவிக்கப்படாதது மக்களிடையே பெருத்த அதிருப்தியை எற்படுத்தியுள்ளது.
தொலைநோக்கு பார்வை இல்லாத...
கவர்னர் உரையில் வரவேற்கத்தகுந்த ஒரே ஒரு அம்சம் என்னவென்றால், சென்ற கவர்னர் உரையில் ‘ஒன்றிய' என்ற வார்த்தை 28 இடங்களில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த வார்த்தை தற்போதைய கவர்னர் உரையில் ஒரே ஒரு இடத்தில்தான் இடம்பெற்றிருக்கிறது. அடுத்த கவர்னர் உரையில் இந்த வார்த்தை இடம் பெறாது என நம்புவோம். இதேபோல், ‘ஜெய்ஹிந்த்' என்ற வார்த்தை சென்ற முறைபோல கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என்றாலும், அந்த வார்த்தையை சொல்லித்தான் கவர்னர் தனது உரையை முடித்து இருக்கிறார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால், வருங்காலத்தை பற்றிய தொலைநோக்கு பார்வையில்லாத, எதிர்கால தலைமுறையை பற்றி சிந்திக்காத, எதற்கும் உதவாத கட்டு கதைகளின் கூட்டு தொகுப்புதான் இந்த கவர்னர் உரை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஜி.கே.வாசன்
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
2022-ம் ஆண்டின் புத்தாண்டு தொடக்கத்தில் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடரின் முதல் நாளில் கவர்னர் ஆற்றிய உரை தமிழக மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது. தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, தேர்தலுக்கு முன்பு அறிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதற்கான அம்சங்களும் இடம்பெறவில்லை.
சொத்து வரியை ஆண்டுதோறும் உயர்த்த வழிவகை செய்யும் சட்ட மசோதாவை இயற்றிய தி.மு.க. அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும், அதனை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.