கொரோனா மற்றும் ஒமைக்ரானால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


கொரோனா மற்றும் ஒமைக்ரானால் ஏற்படும் உயிரிழப்பு குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x
தினத்தந்தி 25 Jan 2022 9:36 PM GMT (Updated: 25 Jan 2022 9:36 PM GMT)

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் உயிரிழப்பு குறைவாக உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள மொழிப்போர் வீரர் ஒ.அரங்கநாதன் நினைவிடத்துக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறும்போது, “ தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை. வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும்போது உயிரிழப்பு ஏற்படுகிறது. அவர்களை பரிசோதிக்கும்போது அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. ஆனால் கொரோனா மற்றும் ஒமைக்ரானால் ஏற்படும் இறப்பு என்பது குறைவாக தான் இருக்கிறது.

ஊரடங்கு தேவையில்லை

தமிழகத்தில் பொங்கல் திருநாளை கொண்டாடுவதற்காக மாநகர பகுதிகளில் இருந்து கிராமங்களுக்கு பொதுமக்கள் சென்றதால் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. இன்னும் 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலை தெரியவரும். கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்-அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்படுகிறது.

தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகளால் தான் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காமல் இருக்கிறது. தொற்றின் பரவல் குறைந்தால் நிச்சயம் ஊரடங்கு என்பது தேவையில்லை” என கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.அரவிந்த்ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகர்ராஜா, கவிஞர் காசிமுத்துமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரி

சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்பு பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். அப்போது ஆஸ்பத்திரி டீன் டாக்டர் ஜெயந்தி உடன் இருந்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

50 மாணவர்களை...

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு மருத்துவ கல்லூரியில் 150 மாணவர்கள் படிக்க வசதியுள்ளது. அங்கு 100 மாணவர்களுக்கு மட்டுமே சேர்க்கை நடைபெறவுள்ளது. அதனால், மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் 50 மாணவர்களை அந்த மருத்துவ கல்லூரியில் சேர்க்கலாம் என்ற ஆலோசனையை தெரிவித்திருக்கிறோம்.

மத்திய அரசும் ஒப்புதல் தரும் நிலையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டிலேயே மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என எதிர்ப்பார்க்கிறோம். 100 மாணவர்கள் மாநில சேர்க்கையிலும், 50 மாணவர்கள் எய்ம்ஸ் சேர்க்கையிலும் இருப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story