சென்னையில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை; அ.தி.மு.க. பிரமுகர் கைது
கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் சமயபுரத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்
சமயபுரம்,
சென்னை துரைப்பாக்கம் பகுதி தி.மு.க. கிளைச் செயலாளராக இருந்தவர் செல்வம். இவர் கடந்த 1-ந் தேதி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சென்னை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் சென்னையில் இருந்து காரில் தப்பிச் செல்வதாக சென்னை போலீசார் மற்ற மாவட்ட போலீசாருக்கு தகவல் கொடுத்து உஷார் படுத்தினர். இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது,சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த ஒரு காரை பிடித்து விசாரணை செய்தனர்.விசாரணையில் அவர்கள் சென்னையில் தி.மு.க. பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்றும், தூத்துக்குடி மாவட்ட அம்மா பேரவை செயலாளாரான சேலையூர் அடுத்த ராஜ கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 42) என்பதும் தெரியவந்தது.
போலீசார் தன்னை தீவிரமாக தேடி வருகின்றனர் என்று அறிந்த அவர் சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு தப்பி செல்வதற்காக காரில் வந்தார் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரையும், காரை ஓட்டி வந்த தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த தனசீலன் (வயது 41) என்பவரையும் போலீசார் கைது செய்து சமயபுரம் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து சமயபுரம் போலீசார் சென்னை போலீசாரிடம் இருவரையும் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story