சென்னை மெரினா பகுதியில் பயங்கரம் உணவு வினியோக ஊழியர் படுகொலை 7 பேர் அதிரடி கைது


சென்னை மெரினா பகுதியில் பயங்கரம் உணவு வினியோக ஊழியர் படுகொலை 7 பேர் அதிரடி கைது
x
தினத்தந்தி 5 Feb 2022 12:32 AM IST (Updated: 5 Feb 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெரினா பகுதியில் உணவு வினியோகிக்கும் ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை மெரினா போலீஸ் எல்லையில் உள்ள நடுக்குப்பத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 24). இவர் சுமட்டோ உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்தார். நேற்று முன்தினம் இரவு இவர் வேலையை முடித்துக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

அஜித்குமாரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். பின்னர் அந்த கொலை வெறியர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அரிவாள் வெட்டில் பலத்த காயம் அடைந்த அஜித்குமார் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அஜித்குமார் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

7 பேர் கைது

இந்த சம்பவம் தொடர்பாக மயிலாப்பூர் உதவி கமிஷனர் கவுதமன் மேற்பார்வையில், மெரினா போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோவன் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். வழக்கில் சம்பந்தப்பட்ட அதே பகுதியை சேர்ந்த ரியாஷ்பாஷா (20), வினோத்குமார் (21), சலீம் (20), ஆகாஷ் (21), கார்த்திக் (23), தமிழரசன் (22) உள்ளிட்ட 7 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.

முன்பகை காரணமாக அஜித்குமாரை தீர்த்துக்கட்டியதாக கைதானவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். அஜித்குமார் தினமும் போதையில் வந்து, தங்களை தாக்கி, தன்னை பெரிய ஆள்போல காட்டிக்கொண்டதால், அவரை போட்டுத்தள்ளியதாக கைதானவர்கள் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

Next Story