மத்திய அரசின் ‘ஏஜெண்டு’ போன்று செயல்பட கூடாது கவர்னருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்


மத்திய அரசின் ‘ஏஜெண்டு’ போன்று செயல்பட கூடாது கவர்னருக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Feb 2022 2:55 AM IST (Updated: 7 Feb 2022 2:55 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் ஏஜெண்டு போன்று செயல்பட கூடாது என்று தமிழக கவர்னரை கமல்ஹாசன் வலியுறுத்தினார்.

சென்னை,

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கவர்னருக்கு உரிய மரியாதையை தருவதற்கு நாங்கள் என்றுமே தயங்கியது இல்லை. ஆனால் எங்களுக்கான சுயமரியாதை அதையும் விட மிக முக்கியமானது. தமிழக கவர்னர் ஏஜெண்டு போன்று செயல்பட கூடாது. கிழக்கு இந்திய கம்பெனியை வெளியே அனுப்பி வைத்துவிட்டு, வடக்கு இந்திய கம்பெனி விளையாட்டு விளையாடுவதற்காக இதை குடியரசு என்று நாங்கள் செய்தோம்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்று எங்களுக்கு கொடுத்த சத்தியத்தை மீறுவதற்கான எல்லா முயற்சிகளும் நடந்துக்கொண்டிருக்கிறது. அதை எதிர்ப்போம் என்பது எங்களுடைய நிலைப்பாடு ஆகும். மத்திய அரசு சொல்வதை கவர்னர் கேட்கிறார். நாம் எதை சொன்னாலும் அவர் கேட்க போவதில்லை. தமிழகத்துக்கு கவர்னர் வேண்டாம் என்பதெல்லாம் நாம் அனைவரும் உட்கார்ந்து பேசக்கூடியது. 1950-ல் கொடுக்கப்பட்ட குடியரசு உரிமைகளுக்கான வாக்குறுதிகளை மீறினால் அது தேச துரோகம் ஆகும்.

மக்கள் நீதி மய்யத்தின் பலம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு இருக்கிறதோ? அங்கெல்லாம் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறோம். எங்கள் பலம் எங்கு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தமிழ்நாட்டை ஒரு போதும் பாசிசம் ஆளக்கூடாது என்பது தான் எங்களது நிலைப்பாடு.

ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டும் என்றால் மதுரை ஐகோர்ட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இது தான் உண்மை நிலை. பெத்தேல் நகரில் இருப்பவர்களை பாதிக்கப்பட்ட மக்களாக கருத வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story