சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது


சென்னை விமான நிலையத்தில் 1 கிலோ தங்கம் பறிமுதல் ரூ.24 லட்சம் வெளிநாட்டு பணமும் சிக்கியது
x
தினத்தந்தி 8 Feb 2022 2:53 AM IST (Updated: 8 Feb 2022 2:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில ரூ.47 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 94 கிராம் தங்கம் மற்றும் ரூ.24 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் உதய்பாஸ்கர் உத்தரவின்பேரில் சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த சைத்துன் பிவீ (வயது 38) என்ற பெண்ணை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து ரூ.42 லட்சத்து 36 ஆயிரம் மதிப்புள்ள 971 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

1 கிலோ தங்கம்

அதேபோல் இலங்கையில் இருந்து விமானத்தில் சென்னை வந்த வாலிபரின் உள்ளாடையில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.5 லட்சத்து 37 ஆயிரம் மதிப்புள்ள 123 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் பெண் உள்பட 2 பேரிடம் இருந்து ரூ.47 லட்சத்து 73 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 94 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளிநாட்டு பணம்

அதேபோல் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு சிறப்பு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது 3 பயணிகளை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் 3 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்கள்.

இதையடுத்து 3 பேரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் இருந்த கைப்பைகளில் ரகசிய அறை வைத்து தைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனா். அந்த ரகசிய அறைக்குள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலா் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

3 பயணிகளிடம் இருந்து ரூ.24 லட்சத்து 29 ஆயிரம் மதிப்புள்ள அமெரிக்க டாலா்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இது தொடர்பாக 3 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story