‘வளமான தமிழகத்தை உருவாக்க தி.மு.க. அரசுக்கு துணையாக இருங்கள்’ தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு


‘வளமான தமிழகத்தை உருவாக்க தி.மு.க. அரசுக்கு துணையாக இருங்கள்’ தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Feb 2022 5:25 AM IST (Updated: 10 Feb 2022 5:25 AM IST)
t-max-icont-min-icon

வளமான தமிழகத்தை உருவாக்க தி.மு.க. அரசுக்கு துணையாக இருங்கள் என்று தேர்தல் பிரசாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

சென்னை,

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வின் பெருமைமிகு நல்லாட்சியானது, உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் முழுமையாக மலர வேண்டும் என்பதற்காகத்தான் உங்களிடம் வாக்குகளைக் கேட்டு நிற்கிறேன். தூத்துக்குடி மாவட்டத்தின் எல்லா மூலையிலும் தி.மு.க.வின் பெயர் சொல்லும் சாதனைச் சின்னங்களைப் படைத்த ஆட்சிதான் தி.மு.க. ஆட்சி. என்னைச் சர்வாதிகாரி என்று சொல்லிய பழனிசாமி, நான் பொம்மை என்றும் சொல்லி இருக்கிறார். மக்கள் கொடுத்த தோல்வியில் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) பேசிய பழனிசாமி, ‘அ.தி.மு.க.வை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று பேசி இருக்கிறார். அதுதான் தோற்றுவிட்டீர்களே! அதன்பிறகும் யாராலும் தோற்கடிக்கமுடியாது என்றால் என்ன அர்த்தம்? ஆட்சி மாறிவிட்டது என்பதையே உணராதவராக இருக்கிறார் பழனிசாமி.

அ.தி.மு.க. ஆட்சியின்போது பொங்கலுக்கு ரூ.5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார், ஸ்டாலின், இப்போது ரூ.100 கூட கொடுக்கவில்லை என்று பேசி இருக்கிறார். நான் ரூ.5 ஆயிரம் கொடுக்கச் சொன்னது, கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண நிதியாகத்தான் கொடுக்கச் சொன்னேன். தி.மு.க. ஆட்சி மலர்ந்த உடனேயே 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2 தவணைகளில் ரூ.4 ஆயிரம் வழங்கிவிட்டோம். ஆனாலும் திசை திருப்பும் பொய்களைச் சொல்லிக் கொண்டு இருக்கிறார், பழனிசாமி.

கவர்னருக்கு கேள்வி

தமிழ்நாட்டு ஏழை-எளிய மாணவர்களுக்கு, கிராமப்புற மாணவர்களுக்கு அதிலும் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ நீட்’ என்ற நுழைவுத்தேர்வு அவர்களது மருத்துவக் கல்விக் கனவை சிதைக்கும் என்பதைத் தொடக்கத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் வாதாடியும் போராடியும் வருகிறார்கள்.

சட்டமன்றத்தில் வைத்து, ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட ‘நீட்’ சட்ட முன்வடிவை, வெறும் நியமனப் பதவியில் உள்ள கவர்னர் ஒருவர் நிராகரிக்கிறார் என்றால் அவருக்கு அந்த தைரியத்தைக் கொடுத்தது யார்? கோடிக்கணக்கான மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை நியமன கவர்னர் நிராகரிக்கிறார் என்றால் இந்த நாட்டில் மக்களாட்சி நடக்கிறதா?.

பிரதமர் மோடிக்கு பதில்

சில நாட்களுக்கு முன்னால் நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி., ராகுல்காந்தி தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். அவருக்குத் தமிழ் மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பா.ஜ.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று ராகுல்காந்தி சொன்னார். இதற்குப் பதில் சொன்ன பிரதமர் மோடி தமிழ்நாட்டு மக்கள் தேசிய உணர்வு கொண்டவர்கள் என்றும் மறைந்த முப்படைத் தளபதிக்கு வீரவணக்கம் செலுத்தியது தமிழ்நாடு என்றும் சொல்லி இருக்கிறார்கள். பா.ஜ.க.வை விமர்சிப்பது என்பதை இந்தியாவையே விமர்சிப்பதாக அவரே திசை திருப்பிக் கொள்கிறார்.

நாட்டுக்காகப் போராடிய தலைவர்களை, வீரர்களை மதித்துப் போற்றுவதில் தமிழ்நாடு யாருக்கும் சளைத்தது அல்ல. தமிழர்களின் நாட்டுப்பற்றுக்குப் பிரதமர் மோடி சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. அதற்கு வரலாறே சாட்சியாக இருக்கிறது. வெறும் நிலப்பரப்புதான் தேசம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இல்லை, இந்த மண்ணில் வாழும் மக்கள்தான் தேசம் என்று நாம் சொல்கிறோம். பல்வேறு இனமும், மொழியும் கலையும் பண்பாடும் கொண்டதுதான் இந்தியத் துணைக்கண்டம் என்கிறோம் நாம். இந்த நாட்டை, பல்வேறு அழகிய மலர்களைக் கொண்ட பூங்கொத்தாக நாங்கள் பார்க்கிறோம். அதனைப் பாதுக்காக்கவே போராடுகிறோம்.

வளமான தமிழகத்தை...

‘நீட்’ தேர்வு விலக்கு சட்டமுன்வடிவுக்கு எதிராக வெளிநடப்பு செய்ததன் மூலமாக, பா.ஜ.க. தமிழ்நாட்டில் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஜனநாயக விரோத, மக்கள் விரோத, தமிழர் விரோத, தமிழ்நாடு விரோத சக்திகள் இந்தத் தேர்தலில் மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதைச் சொல்லி, வளமான தமிழகத்தை உருவாக்கத் தி.மு.க. அரசுக்கு நீங்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story