2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது..!


2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கியது..!
x
தினத்தந்தி 16 Feb 2022 10:09 AM IST (Updated: 16 Feb 2022 10:09 AM IST)
t-max-icont-min-icon

2 ஆண்டுகளுக்குப் பின் நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

திருச்செந்தூர்,

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 9-ம் திருநாளான நேற்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. 

காலையில் மேலக்கோவிலில் இருந்து சுவாமி அலைவாயுகந்த பெருமானும், குமரவிடங்கபெருமானும் தனித்தனி வெள்ளி குதிரை வாகனங்களில் எழுந்தருளி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் திருக்கண் சாத்தியபின் 8 வீதிகளிலும் உலா வந்து மீண்டும் மேலக்கோவில் சென்றடைந்தனர்.

நேற்று இரவு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

இந்த நிலையில் மாசித்திருவிழாவின் 10-ம் திருநாளான இன்று (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது, 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் காலை 6.30 மணியளவில் கோலாகலமாக தொடங்கியது. 

முதலில் விநாயகர் தேர், 2-வது சுவாமி குமரவிடங்க பெருமான் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளும் பெரிய தேர், 3-வது தெய்வானை அம்பாள் எழுந்தருளும் தேர் என மூன்று தேர்களும் தனித்தனியாக வெளிவீதி நான்கிலும் பவனி வரும் காட்சி கண்களை கொள்ளை கொண்டது.

இந்த திருவிழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை. 

2 ஆண்டுகளுக்குப் பின் இன்று தேரோட்டம் நடைபெறுவதால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வருகின்றனர். அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

Next Story