நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க. பெறும்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறது என்று திருமண விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
திருமணம்
தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை - தமிழ்ச்செல்வி தம்பதியின் மகன் கலை கதிரவனுக்கும், எஸ்.பிரசாத் - பி.முத்துலட்சுமி தம்பதியின் மகள் சந்தியாவுக்கும் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்கா ஸ்டாலினுடன் சென்று தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தார். மணமக்களை வாழ்த்தி மலர்கூடையையும் பரிசளித்தார்.
திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
சந்தேகம் இல்லை
நாளை மறுநாள், நேற்றைய தினம் நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
இப்போதுகூட தேர்தல் நேரத்தில் காணொலி காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களை சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னை பார்த்து, மக்களை பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.
நேரடியாக செல்லாதது ஏன்?
எதற்காக நான் காணொலி காட்சியின் மூலமாக அந்த பிரசாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கொரோனா காலமாக இருக்கின்ற காரணத்தால், அந்த தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாக செல்லவில்லை.
அதே நேரத்தில் நான் பேசிய அனைத்து கூட்டங்களிலும் சொன்னேன். தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்றபோது, நிச்சயமாக உறுதியாக அனைத்து மாவட்டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லியிருக்கிறேன்.
இதயப்பூர்வமான நன்றி
ஏன் வரவில்லை என்று கேட்டவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது, “மழைக்காலத்தில் நான் வெள்ளப்பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக்கொள்கிறாய்” என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
எனவே, தேர்தல் நேரத்தில் பணியாற்றியிருக்கும் அத்தனை பேருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றிகளை, பாராட்டுதல்களை, வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
Related Tags :
Next Story