இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.30 கோடி போதைப்பொருள் சிக்கியது 8 பேர் கைது


இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.30 கோடி போதைப்பொருள் சிக்கியது 8 பேர் கைது
x
தினத்தந்தி 22 Feb 2022 2:10 AM IST (Updated: 22 Feb 2022 2:10 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகில் கடத்த முயன்ற ரூ.30 கோடி மதிப்பிலான போதைப்பொருள் போலீசாரிடம் சிக்கியது. இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே வேம்பார் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கிருந்த படகில் சிலர் புறப்பட்டனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து படகை நிறுத்தினர்.

பின்னர் படகில் சோதனை நடத்தினர். அப்போது படகின் அடிப்பகுதியில் 5 பாலித்தீன் பைகளில் தலா 2 கிலோ வீதம் வெள்ளை நிற கற்கண்டு போன்ற பொருள் இருந்தது. இதனை பறிமுதல் செய்த போலீசார் பரிசோதனை செய்தனர். அப்போது அது கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற போதைப்பொருள் என்பது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்கிய அந்த 10 கிலோ போதைப்பொருளின் சர்வதேச மதிப்பு ரூ.30 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

8 பேர் கைது

போலீசார் நடத்திய விசாரணையில், அந்த போதைப்பொருளை தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் கடத்த முயன்ற பரபரப்பு தகவல் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

அந்த போதைப்பொருளை யாரிடம் இருந்து வாங்கினார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் போதைப்பொருளை தூத்துக்குடி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

Next Story