74-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை


74-வது பிறந்தநாள்: ஜெயலலிதா சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி மரியாதை
x
தினத்தந்தி 25 Feb 2022 3:24 AM IST (Updated: 25 Feb 2022 3:24 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவச்சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா உருவச்சிலைகளுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம், முன்னாள் துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, ஜே.சி.டி.பிரபாகர், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. உள்பட வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, .தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, க.பாண்டியராஜன், பா.பெஞ்சமின், இலக்கிய அணி செயலாளர் வைகைச்செல்வன் உள்ளிட்டோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா உருவசிலைகளுக்கு மரியாதை செலுத்திய பின்னர் அ.தி.மு.க. கொடியை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஏற்றினர். அப்போது திரண்டிருந்த தொண்டர்கள் ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். வாழ்க... புரட்சித்தலைவி ஜெயலலிதா வாழ்க...' என வாழ்த்து கோஷங்களை எழுப்பினர்.

அதனைத்தொடர்ந்து தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இனிப்புகள் வழங்கினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் தோரணங்கள், கட்சி கொடி கம்பங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆங்காங்கே அ.தி.மு.க. தொண்டர்கள் லட்டு, மைசூர்பாகு, ஜாங்கிரி உள்ளிட்ட இனிப்புகள் வழங்கி ஜெயலலிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

ஜெ.தீபா

இதேபோல் ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாளையொட்டி, சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உடனிருந்தார்.

Next Story