தமிழகத்திலிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது - தேஜஸ்வி யாதவ்
தமிழகத்தில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என்று முதல் அமைச்சரின் சுயசரிதை வெளியீட்டு விழாவில் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பள்ளி-கல்லூரி படிப்பு காலம், இளமை காலம், அரசியல் ஆர்வம், முதல் அரசியல் கூட்டம், முதல் பொதுக்கூட்ட பேச்சு, திரையுலகில் கால் தடம் பதித்தது, திருமண வாழ்க்கை, மிசா காலத்தின் தொடக்கம் என 1976-ம் ஆண்டு வரையிலான 23 ஆண்டு கால வாழ்க்கை பயணத்தை ‘உங்களில் ஒருவன்’ என்ற தலைப்பில் சுயசரிதை புத்தகமாக எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய கூட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பீகார் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் தேஜஸ்வி யாதவ் பேசியதாவது:-
அரசியல் சாசன உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக தமிழகத்திடம் இருந்து கற்று கொள்கிறோம். தமிழகத்தின் சமூக நீதி இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் லாலு பிரசாத்.
இந்த புத்தகத்தை படித்ததன் மூலம் வரலாற்று நிகழ்வுகளை தெரிந்து கொண்டேன். சரித்திரம் படைப்பவர்கள் வரிசையில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். அவர் மக்களின் நாடியை நன்கு அறிந்து வைத்துள்ளார்.
தமிழ்நாட்டை பார்க்கும் போது சமூக நீதி, மக்கள் ஒற்றுமை குறித்து ஆச்சரியமாக இருக்கும். தமிழ்நாடு தனித்துவமான சமூகமாக கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து வகையான வளர்ச்சி குறியீடுகளிலும் தமிழகம் முன்னணியில் உள்ளது. தமிழகத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story