எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு


எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது எடப்பாடி பழனிசாமி ஆவேச பேச்சு
x
தினத்தந்தி 1 March 2022 1:39 AM IST (Updated: 1 March 2022 1:39 AM IST)
t-max-icont-min-icon

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தில்லுமுல்லு செய்து தி.மு.க. வெற்றி பெற்று விட்டது என்றும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசினார்.

சேலம்,

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக கூறியும், அதைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று மாவட்ட தலைநகரங்களில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

சேலம் புறநகர், மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சேலம் கோட்டை மைதானம் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

முன்னாள் அமைச்சர் கைது

தமிழகத்தில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளே இருக்க கூடாது என தி.மு.க. அரசு நினைக்கிறது. அதற்காகத்தான் திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்றவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது குற்றமா?. அதுதானே நியாயம். ஆனால் போலீசார் கள்ள ஓட்டு போட்டவரை விட்டு விட்டு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு எந்திரத்தில் தில்லுமுல்லு, சதி திட்டம் தீட்டி தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தால் கட்சியை அழித்துவிடலாம் என்று நினைக்கிறீர்கள். எந்த கொம்பனாலும் அ.தி.மு.க.வை அசைக்க முடியாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் இந்த இயக்கத்தை யாராலும் அழித்துவிட முடியாது. அப்படி நினைத்தால் தி.மு.க. காணாமல் போய்விடும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Next Story