புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆவடியில் மேயராகும் உதயகுமார்


புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி ஆவடியில் மேயராகும் உதயகுமார்
x
தினத்தந்தி 4 March 2022 2:54 AM IST (Updated: 4 March 2022 2:54 AM IST)
t-max-icont-min-icon

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக உதயகுமார் பதவி ஏற்க உள்ளார்.

ஆவடி,

புதிதாக உருவாக்கப்பட்ட ஆவடி மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 43 இடங்களிலும், அ.தி.மு.க. 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர். தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் மற்றும் ஒரு சுயேச்சை ஆகிய 3 பேரும் தி.மு..க.வில் இணைந்ததால் தி.மு.க.வின் பலம் 46 ஆனது. இதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எண்ணிக்கை 2 ஆக குறைந்தது.

ஆவடி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனத்தை சேர்ந்த பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் தி.மு.க. 9-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயகுமார், ஆவடி மாநகராட்சி் மேயர் வேட்பாளராக தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

சாதாரண குடும்பம்

திருமுல்லைவாயல் திருவள்ளுவர் தெருவில் வசிக்கும் 42 வயதான உதயகுமார், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அப்பகுதி தி.மு.க. வட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார்.

இவருடைய மனைவி விநாயகி (28). இவர்களுக்கு ஜெய் ஆதித்யா (4½) என்ற மகன் உள்ளார். சாதாரண குடும்பத்தை சேர்ந்த உதயகுமார், தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது ஆவடி மாநகராட்சியின் முதல் மேயராக பதவி ஏற்க உள்ளார்.

துணை மேயர்

அதேபோல் ஆவடி மாநகராட்சியின் துணை மேயர் பதவி தி.மு.க. கூட்டணியான ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பில் 23-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சூர்யகுமார், துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

48 வயதாகும் சூர்யகுமார், ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இவருடைய மனைவி பார்வதி (42). இவர்களுக்கு விஷ்ணு (12) என்ற மகன் உள்ளார். ம.தி.மு.க. கட்சி தொடங்கியதில் இருந்தே தீவிரமாக கட்சி பணியாற்றி வருகிறார். ஏற்கனவே ஆவடி நகராட்சியாக இருக்கும்போது 21-வது வார்டு கவுன்சிலராக இருந்து வந்தார். கட்சியில் வட்ட செயலாளர், நகர செயலாளர், வார்டு உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்து வந்த சூர்யகுமார், தற்போது ஆவடி நகர செயலாளராக உள்ளார்.

ம.தி.மு.க சார்பில் ஆவடி மாநகராட்சியின் முதல் துணை மேயராக சூர்யகுமார்் பதவி ஏற்க உள்ளார்.

Next Story