அ.தி.மு.க உறுப்பினர்களின் உதவியோடு பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க


அ.தி.மு.க உறுப்பினர்களின் உதவியோடு பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிய தி.மு.க
x
தினத்தந்தி 4 March 2022 4:38 PM IST (Updated: 4 March 2022 4:38 PM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க உறுப்பினர்களின் உதவியோடு தி.மு.க நகரச் செயலாளரான ராஜேந்திரன் பண்ருட்டி நகராட்சித் தலைவர் பதவியைக் கைப்பற்றினார்.

பண்ருட்டி,

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகர சபையில் 33 வார்டுகள் உள்ளன. நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி 24 வார்டுகளில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலம் படைத்தது. 

அ.தி.மு.க. 7 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றிருந்தனர். இந்த நிலையில் நகரசபைத் தலைவருக்கான தேர்தல் இன்று பண்ருட்டி நகரசபை பேரறிஞர் அண்ணா மன்ற கூடத்தில் நடைபெற்றது. 

இதில் தி.மு.க. தலைமையால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்த 2-வது வார்டு உறுப்பினர் ஏ. சிவாவும், அவரை எதிர்த்து 16-வது வார்டு உறுப்பினரும், தி.மு.க. நகரச் செயலாளருமான கே.ராஜேந்திரனும் போட்டியிட மனு தாக்கல் செய்தனர். 

தி.மு.க.வில் 2 பேர் மனு தாக்கல் செய்ததால் மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த 7 உறுப்பினர்கள் உட்பட 33 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தி.மு.க. அதிகாரபூர்வமான வேட்பாளர் ஏ. சிவாவை  நகர செயலாளர் ராஜேந்திரன் தோற்கடித்து வெற்றி பெற்றார். 

ஏ. சிவாவுக்கு 16 ஓட்டுக்களும், கே ராஜேந்திரனுக்கு 17 ஓட்டுகளும் கிடைத்தன. தேர்தல் அதிகாரியும் நகரசபை ஆணையாளருமான மகேஸ்வரி வெற்றி பெற்ற ராஜேந்திரனுக்கு சான்றிதழை வழங்கினார். பின்னர் ராஜேந்திரன் பண்ருட்டி நகரசபை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். 

மதியம் நகரசபை துணை தலைவருக்கான தேர்தல் நடத்துவதற்கான கூட்டம் நடைப்பெற்றது.இதில் 16 உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இதனால் கூட்டம் நடத்தப்படுவதற்கான கோரிக்கை இல்லாததால் துனை தலைவருக்கான தேர்தலை ஒத்திவைப்பதாக ஆணையர் மகேஸ்வரி அறிவித்தார்.

Next Story