உக்ரைனில் இருந்து தமிழர்களை மீட்க ரூ.14 லட்சம் பேருந்து கட்டணம் செலுத்திய தமிழக அரசு
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை அண்டை நாட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக ரூ.14 லட்சம் பேருந்து கட்டணத்தை தமிழக அரசு செலுத்தியுள்ளது.
சென்னை,
உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கி இருக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு மத்திய மந்திரிகளையும் அனுப்பி இருக்கிறது. அவர்களது மேற்பார்வையில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.
அதே சமயம் உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மீட்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது.
இந்த நிலையில் உக்ரைனின் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் தொடர்புகளை பயன்படுத்தி, போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து நேற்று 35 மாணவர்களை பேருந்து மூலம் பத்திரமாக அழைத்துச் செல்ல தமிழக அரசு உதவியுள்ளது. இதற்கான பேருந்து கட்டணமாக 17 ஆயிரத்து 500 டாலர்கள் அதாவது, இந்திய மதிப்பில் 14 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது.
Related Tags :
Next Story