12 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை: தமிழகத்தில் 151 பேருக்கு கொரோனா


12 மாவட்டங்களில் புதிய பாதிப்பு இல்லை: தமிழகத்தில் 151 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 9 March 2022 4:32 AM IST (Updated: 9 March 2022 4:32 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 12 மாவட்டங்களில் புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 40 ஆயிரத்து 745 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 86 ஆண்கள், 65 பெண்கள் என மொத்தம் 151 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 51 பேரும், கோவையில் 18 பேரும், செங்கல்பட்டில் 16 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக வேலூரில் 8 பேரும், திருச்சி, திருவள்ளூர், நீலகிரியில் தலா 7 பேரும் உள்பட 23 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், அரியலூர், மயிலாடுதுறை உள்பட 12 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோல், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சிகிச்சையில் இருந்து அனைவரும் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது, இந்த 2 மாவட்டங்களும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தலா 26 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 36 லட்சத்து 20 ஆயிரத்து 105 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 51 ஆயிரத்து 322 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 28 ஆயிரத்து 69 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்து 3 ஆயிரத்து 999 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 315 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 129 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 62 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

2 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அந்த வகையில் கோவை, திருவண்ணாமலை என 2 மாவட்டங்களில் தலா ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளனர். 36 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. உயிரிழந்த 2 பேரும் இணை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 19 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 418 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 106 பேரும், செங்கல்பட்டில் 48 பேரும், கோவையில் 53 பேரும் அடங்குவர். இதுவரையில் 34 லட்சத்து 11 ஆயிரத்து 158 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 ஆயிரத்து 145 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story