சட்ட ஒழுங்கு பிரச்சினையில் கள நிலவரத்துக்கு ஏற்ப போலீஸ் சூப்பிரண்டுகளே நடவடிக்கை எடுக்கலாம்


சட்ட ஒழுங்கு பிரச்சினையில் கள நிலவரத்துக்கு ஏற்ப போலீஸ் சூப்பிரண்டுகளே நடவடிக்கை எடுக்கலாம்
x
தினத்தந்தி 11 March 2022 3:45 AM IST (Updated: 11 March 2022 3:45 AM IST)
t-max-icont-min-icon

சட்ட ஒழுங்கு பிரச்சினையில் கள நிலவரத்துக்கு ஏற்ப மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளே சட்ட வரம்புக்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று காவல் துறை மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, காவல் துறை அலுவலர்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. செ.சைலேந்திரபாபு, போலீஸ் எஸ்.பி.க்கள், காவல் துறை மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மாநாட்டின் தொடக்கமாக, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-

உடனடி நடவடிக்கை

காவல்துறையின் பெரிய கவலையாகவும், பணியாகவும் இருக்கப்போவது, சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதும், அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுப்பதும்தான்.

இன்னும் சொல்லவேண்டுமென்றால், நாட்டில் ஏற்படுகிற சாதி - மத மோதல்களுக்கும், உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இடையூறு ஆகியவற்றுக்கும், தொடக்கப்புள்ளியாக இருப்பது, இந்த சமூக வலைதளம்தான். இங்கு பல்வேறு தலைப்புகளில் பேசுபவர்கள், களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளோடு, ஆன்லைனில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதன்பின்னர், மாநாட்டின் நிறைவாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இதர அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் உள்ள இந்தப் பெரிய வேறுபாட்டினை நீங்கள் உணர வேண்டும். இதனை எப்போதும் நெஞ்சில் நிறுத்தி நீங்கள் செயல்பட வேண்டும். குறிப்பாக, ஓரிரு விஷயங்களை உங்களுக்கு இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.

கள நிலவரத்துக்கு ஏற்ப நடவடிக்கை

சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள் (போலீஸ் சூப்பிரண்டு), கள நிலவரத்திற்கு ஏற்ப, சட்ட வரம்பிற்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தனியாக மேலிடத்தில் இருந்து ஆணை வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, காத்திருக்கவும் கூடாது.

அடுத்து, உயர் அலுவலர்கள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் நேரங்களில், நேரடியாக களத்திற்குச் சென்று, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இது சார்-நிலை அலுவலர்களுக்கு தெம்பும், தைரியமும் அளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் இதனால் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்.

அரசின் நோக்கங்கள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, மக்கள் நலம் - சமுதாய நல்லிணக்கம் - குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை - இதனைக் கொண்டுவர வேண்டியது உங்களது கரங்களில்தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்திட வேண்டுமென்று உங்களை எல்லாம் இந்த நேரத்திலே கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

போலீஸ் அதிகாரிகளுக்கு விருது

மாநாட்டில், சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கி சிறப்பித்தார். அதன்படி, குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக மதுரை போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா, போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கைக்காக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல்.பாலாஜி சரவணன், இ-அலுவலக மேலாண்மையை சிறப்பாக கையாண்டதற்காக கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாகரத்தினம், உட்சுற்றுக் கேமராக்களை அதிகமாக பயன்படுத்தியதற்காக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா, இணையதளக் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் டாகுர் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து விருதுகளை பெற்றனர்.

Next Story