பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர்
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார்.
சென்னை,
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்;
நல்ல திட்டங்களையும், வளர்ச்சிப்பணிகளையும் மேற்கொள்ளும் மாவட்ட ஆட்சியர்கள், அதே நேரத்தில் மக்களை உடனடியாக பாதிக்கக்கூடிய குறிப்பிட்ட அத்தியாவசிய பணிகளான பட்டா மாறுதல், சான்றிதழ்கள் வழங்குதல், நீர்நிலை, புறம்போக்கு நிலங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்ற பணிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
பட்டியலின பழங்குடியினர், விளிம்பு நிலை மனிதர்கள், சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் தேவைகளை பூர்த்தி செய்வதில் முன்னுரிமை அளிக்கவேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அட்டவணை வழங்குவதில் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.
மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடிகள், பள்ளிகள், மாணவர் விடுதிகள், நியாய விலை கடைகள் ஆகியவற்றை கட்டாயமாக நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு, மாணவர்களுக்கு, எளியோர்களுக்கு எந்த தரத்தில் சேவை வழங்கப்படுகிறது என்பதனை அறியமுடியும். பேரிடர் காலங்களில் மக்களின் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.
தமிழகம் பொருளாதாரத்தில் இந்தியாவில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும், ஊட்டச்சத்து பட்டியலில் 19 ஆவது இடத்தில் இருப்பது கவலைக்குரியதாக உள்ளது. இதனை சரிசெய்வது நாம் அனைவரின் கடமையாகும். அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இணைப்புப்பாலமாக செயல்படும் ஆட்சியாளர்கள், உங்கள் மாவட்டத்தை முன்னேற்றப்பாதைக்கு கொண்டுசெல்லும் வழிகாட்டியாக இருக்கவேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story