கோர்ட்டில்தான் ஜெயக்குமார் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை


கோர்ட்டில்தான் ஜெயக்குமார் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை
x

சட்டத்தின் ஆட்சிதான் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்துள்ளது என்றும், அவர் கோர்ட்டில்தான் தன்னை நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்றும் ஆர்.எஸ்.பாரதி காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அராஜகமாக செயல்பட்டு ஏதோ தானே ஒரு சினிமா போலீஸ் அதிகாரி போல் நினைத்துக்கொண்டு தி.மு.க. தொண்டரை இழிவாக நடத்திய அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஆணவச்செயலை அனைத்து ஊடகங்களும் காட்சிப்படுத்திய பிறகும் கூட, “அ.தி.மு.க.வை எச்சரிப்பதற்காக என்னை கைது செய்திருக்கிறார்கள். என் கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை” என அவர் வழக்கம்போல் அபாண்டமாக புளுகியிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது.

எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் அர்த்தமற்ற அவதூறுகளை புறந்தள்ளி, ஆக்கப்பூர்வமான கருத்துகள் இருந்தால் அவற்றை சீர்தூக்கி பார்த்து, காது கொடுத்து கேட்கும் ஒரு முதல்-அமைச்சரை தமிழ்நாடு பெற்றிருப்பதை ஜெயக்குமாரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.

கோர்ட்டில் நிரூபிக்க வேண்டும்

“நில அபகரிப்பு” “பொது வெளியில் அராஜகம்” “கொலை முயற்சி வழக்கு” உள்ளிட்ட புகார்களுக்கு ஜெயக்குமார் கோர்ட்டில்தான் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டுமே தவிர பத்திரிகை பேட்டிகள் வாயிலாக அல்ல.

ஜெயக்குமார் அ.தி. மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும் இல்லை. இணை ஒருங்கிணைப்பாளரும் இல்லை. சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லை. ஆகவே அவரை கைது செய்வது அ.தி.மு.க.வை எச்சரிப்பதாக எப்படி அமையும்?. எனவே, தி.மு.க.வின் மீதும், தி.மு.க. தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் மீது புழுதி வாரி வீசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

ஜெயக்குமார் எத்தனையோ அவதூறு பேட்டிகளை கொடுத்தாலும்- அதற்காக அவர் கைது செய்யப்படவில்லை. அதுவே எங்கள் கட்சித்தலைவர் காட்டிய பெருந்தன்மை. ஆனால் முன்னாள் அமைச்சராக இருந்த ஜெயக்குமாரே சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு சாலையில் அராஜகத்தில் ஈடுபடும்போது, சட்டத்தின் ஆட்சிதான் அவரை கைது செய்ததே தவிர தி.மு.க.வோ, எங்கள் கட்சித்தலைவரோ இல்லை என்பதை அவர் புரிந்துகொள்வது நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story