18 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா


18 குழந்தைகள் உள்பட தமிழகத்தில் 77 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 16 March 2022 4:41 AM IST (Updated: 16 March 2022 4:41 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 18 குழந்தைகள் உள்பட 77 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 35 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 41 ஆண்கள், 36 பெண்கள் என மொத்தம் 77 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 28 பேரும், கோவையில் 10 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக வேலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், தருமபுரியில் தலா 3 பேரும் உள்பட 17 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரியலூர், கடலூர் உள்பட 19 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டவில்லை.

அதேபோல் அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சிகிச்சையில் இருந்து அனைவரும் பூணரமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது, இந்த 2 மாவட்டங்களும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகி உள்ளது.

18 குழந்தைகள் பாதிப்பு

12 வயதுக்குட்பட்ட 18 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 14 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 39 லட்சத்து 6 ஆயிரத்து 874 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 52 ஆயிரத்து 73 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 185 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் நேற்று எந்த உயிரிழப்பும் இல்லை. மேலும், கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 169 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 962 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story