பா.ஜ.க. ஆதாயம் தேடப் பயன்படுத்தும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' கட்டுக்கதைதான்: கே.எஸ். அழகிரி
பா.ஜ.க. ஆதாயம் தேடப் பயன்படுத்தும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படமே கட்டுக்கதைதான்: என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறி உள்ளார்.
சென்னை
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1947 இல் இந்தியா சுதந்திரம் பெற்ற போது, காஷ்மீர் மாநிலத்தை இணைப்பதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. அந்த மாநிலத்தில் வாழ்கிற 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மக்கள் இஸ்லாமியர்களாக இருந்ததால் அந்த பகுதி பாகிஸ்தானுடன் இணைவதா ? இந்தியாவுடன் இணைவதா ? என்ற சிக்கலான நிலைமை ஏற்பட்டது.
இந்தச் சூழலில் காஷ்மீர் மக்களின் ஒப்பற்றத் தலைவராக இருந்தவரும், மதச்சார்பற்ற கொள்கையில் பண்டித நேரு அவர்களின் தோளோடு தோள் நின்று பணியாற்றியவருமான ஷேக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்று விரும்பினார்.
முஸ்லிம் நாடான பாகிஸ்தானுடன் இணைக்க அவர் விரும்பவில்லை. அப்போது, காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்தது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கும், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஷேக் அப்துல்லாவுக்கும் இடையே இருந்த நட்புறவு தான்.
அந்த நட்பின் காரணமாகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, பிரிவு 370 அரசமைப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு, சிறப்புச் சலுகையுடன் காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அப்போது, அந்த சிறப்புச் சலுகை வழங்கப்படாமல் இருந்திருந்தால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்திருக்காது.
இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த வரலாற்றுப் பின்னணியை முற்றிலும் சிதைக்கிற வகையில் பாரதிய ஜனதா கட்சி சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை 370-ஐ ரத்து செய்து விட்டு, அந்த மாநிலத்தை, அம்மாநில மக்களின் ஒப்புதலைப் பெறாமல் மூன்று பிரிவுகளாகப் பிரித்து விட்டது.
இதனால் அங்கே வாழ்கிற மக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், அங்குள்ள அரசியல் தலைவர்கள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமலும் மோடி ஆட்சியால் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்களது பேச்சுரிமையும் கருத்துரிமையும் பறிக்கப்பட்டுள்ளன.
காஷ்மீர் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைப்பதற்காகவும், திசை திருப்புவதற்காகவும், அந்த மாநிலத்தில் இஸ்லாமியர்களோடு சகோதர, சகோதரிகளாக வாழ்ந்த பண்டிட்டுகளுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டதாக ஆதாரமற்ற அவதூறு கருத்துகளைத் திரித்துக் கூறுகிற வகையில் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' என்கிற திரைப்படம் தயாரிக்கப்பட்டு, வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த திரைப்படத்தின் மூலம், மததுவேஷத்தை வளர்த்து மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து அரசியல் ஆதாயம் தேடுவதே பா.ஜ.க.வின் நோக்கமாகும். இந்த நோக்கம் நிறைவேற, வகுப்புவாத சக்திகள் சமூக ஊடகங்களில் பண்டிட்டுகள் குறித்து ஆதாரமற்ற கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள்.
எல்லாவற்றிற்கும் மேலாக காஷ்மீரை இந்தியாவோடு இணைப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களே பண்டிட் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதை எவரும் மறந்திட இயலாது.
அரைகுறையான உண்மைகளையும், ஆதாரமற்ற கட்டுக் கதைகளையும் ஒருதலைபட்சமாகக் காட்சிப்படுத்தி இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பை வளர்க்கும் கொடூர நோக்கம் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தி காஷ்மீர் ஃபைல்ஸ். இத்திரைப்படம் கட்டுக்கதைகளைப் பரப்புகிற நோக்கம் கொண்டது என்பதற்கு வரலாற்று ரீதியாக நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன.
காஷ்மீரத்தில் தீவிரவாதிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கலவரத்தால் பண்டிட் சமூகத்தினர் 1990 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் தான் பெருமளவு வெளியேறினர். அப்போது, மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி இல்லை. மாநிலத்திலும் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியில் இல்லை.
அப்போது, மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆதரவைப் பெற்ற பிரதமர் வி.பி. சிங் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அன்று 85 மக்களவை உறுப்பினர்களுடன் வி.பி.சிங் ஆட்சிக்கு ஆதரவாக இருந்த பா.ஜ.க.வின் தலைவர் அத்வானி பரிந்துரை செய்து மீண்டும் கவர்னராக நியமிக்கப்பட்டவர் தான் ஜக்மோகன். அவர் ஒரு தீவிர முஸ்லிம் வெறுப்பாளராகவும், ஆர்.எஸ்.எஸ்., விசுவாசியாகவும் இருந்த காரணத்தால் ஆளுநர் பதவியில் அமர்த்தப்பட்டார். அன்றைக்கு முஸ்லிம்கள் மத்தியில் தீவிரவாதம் தலைதூக்கி கலவரம் தலைவிரித்தாடியதற்கும், பண்டிட்டுகள் பெருமளவு வெளியேறுவதற்கும் அடிப்படை காரணமாக இருந்தது அன்றைய கவர்னர் ஜக்மோகனின் அடக்குமுறை ஆட்சி தான்.
1990களில் பண்டிட்டுகளுக்கு நிகழ்ந்த கொடுமைகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கோ, காங்கிரஸ் ஆட்சிக்கோ கடுகளவு தொடர்பும் இல்லை. தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணர்ந்ததாக நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். இதைவிட அப்பட்டமான அவதூறு வேறு எதுவும் இருக்க முடியாது.
2008-2009 இல் மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட புலம் பெயர்ந்த காஷ்மீர் மக்கள் மறுவாழ்வு திட்டத்தின் மூலம் நிவாரணமும், 6,000 பண்டிட் சமூக இளைஞர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டன. இதன்மூலம், மொத்தம் 15,000 பண்டிட்டுகளுக்கு பணி கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
பா.ஜ.க. அரசு பண்டிட்டுகளின் புனர்வாழ்வுக்கு ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடாமல் இன்று நீலிக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
காஷ்மீர் பண்டிட்டுகளும், முஸ்லீம்களும் சகோதரத்துடன் தான் வாழ்ந்து வந்தார்கள். இஸ்லாமிய நாட்டுப்புற இசை நிகழ்ச்சிகள் இல்லாத பண்டிட்டுகளின் சுப நிகழ்வுகளே இல்லை என்றொரு காலம் இருந்தது. இத்தகைய நல்லிணக்கம், கவர்னர் ஜக்மோகனின் அடக்குமுறையில் வளர்ந்த தீவிரவாதத்தினால் உருவான கலவரங்கள் தான் பண்டிட்டுகள் பெருமளவு வெளியேறக் காரணமாக இருந்தது.
காலம் காலமாக சகோதர, சகோதரிகளாக ஒன்றிப் பிணைந்து, ஒரே மொழி பேசி உறவாடிய சமூகங்களை இன்று எதிரும், புதிருமாக நிறுத்துவதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு பா.ஜ.க.வின் மலிவான மதவாத அரசியலே காரணம். பண்டிட்டுகள் வெளியேற்றத்தின் மூலம் மத துவேஷத்தை வளர்த்து, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவதே காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் நோக்கமாகும். ஆனால், காஷ்மீர் மாநில வரலாற்றை அறிந்தவர்கள் இத்திரைப்படத்தில் கூறப்பட்டுள்ள ஆதாரமற்ற நச்சுக் கருத்துகளை எந்த நிலையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மத துவேஷத்தை வளர்க்கும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை தயாரித்த இயக்குநரை பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாராட்டி ஊக்கப்படுத்துவது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்ட மதச்சார்பற்ற கொள்கைகளை குழிதோண்டிப் புதைக்கிற செயலாகும். இதன்மூலம், மக்களை பிளவுபடுத்துகிற அரசியலை வளர்த்து மதநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் பா.ஜ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கே.எஸ். அழகிரி கூறி உள்ளார்.
Related Tags :
Next Story