“ஊழலை வெளிக்கொண்டு வருவது பா.ஜனதாவின் கடமை” - அண்ணாமலை பேட்டி


“ஊழலை வெளிக்கொண்டு வருவது பா.ஜனதாவின் கடமை” - அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 18 March 2022 3:14 AM IST (Updated: 18 March 2022 3:14 AM IST)
t-max-icont-min-icon

என்னை சிறைக்கு அனுப்பினாலும் வெளியே வந்து ஊழல் பற்றி பேசுவேன் என்றும், ஊழலை வெளிக்கொண்டு வருவது பா.ஜனதாவின் கடமை எனவும் மதுரையில் அளித்த பேட்டியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை,

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று மதுரை தல்லாகுளத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு தனியார் நிறுவனத்துக்கு ரூ.4,472 கோடியிலான மின்திட்டம் வழங்கப்பட்டதில் ஊழல் நடந்துள்ளது என்பதை தெரிவித்திருந்தேன். இதற்கு தமிழக மின்துறை அமைச்சர் தரப்பில் ஏராளமான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அந்த நிறுவனத்தின் ஊழியர் போல பேசுகிறார். அந்த நிறுவனம் ஏற்கனவே திவாலான நிறுவனம். அதன் வங்கி கணக்கில் ரூ.33 கோடி மட்டுமே இருப்பில் உள்ளது. இதுபோன்ற சூழலில் மிகப்பெரிய திட்டத்தை எப்படி வழங்க முடியும்? என்பது புரியாத கேள்வியாக உள்ளது.

ஊழல்வாதி

மக்கள் வரிப்பணத்தை வீணடிப்பதை பா.ஜனதா அனுமதிக்காது. ஊழல் எப்படி செய்ய வேண்டும் என்பதை செந்தில் பாலாஜியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜி ஊழல்வாதிதான் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினே முன்பு கூறி இருக்கிறார்.

ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் மிகப்பெரிய மின்வெட்டு இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஊழலை தட்டிக்கேட்பதால் என் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தாலும், போலீசை வைத்து கைது செய்து சிறைக்கு அனுப்பினாலும், சிறையில் இருந்து வந்து மீண்டும் தி.மு.க. அரசின் ஊழலைப்பற்றி பேசி, வெளிக்கொண்டு வருவேன்.

முதல்-அமைச்சருக்கு கடிதம்

தமிழக அரசியல்வாதிகள் அடிக்கடி துபாய் செல்கின்றனர். அது எதற்காக என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். அந்த ஒப்பந்தம் தொடர்பாக தமிழக முதல்-அமைச்சருக்கு பா.ஜ.க. சார்பில் கடிதம் அனுப்பப்பட உள்ளது. மேலும் ‘செபி' அமைப்புக்கும் புகார் தெரிவிக்கப்பட உள்ளது.

ஊழலில் ஈடுபடுவது எந்த கட்சியாக இருந்தாலும் ஏற்க முடியாது. ஊழலை வெளிக்கொண்டு வருவது பா.ஜனதாவின் கடமை. இந்த விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story