ஆசிய நாடுகளில் வேகம் எடுக்கும் கொரோனா: தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஆசிய நாடுகளில் கொரோனா வேகம் எடுப்பதால் தமிழக மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மெகா தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் 25-வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், டாக்டர் நா.எழிலன் எம்.எல்.ஏ., பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆசிய நாடுகளில் வேகமெடுக்கிறது
கடந்த 7 நாட்களாக கொரோனா தொற்றின் அளவு 100-க்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல் இறப்பும் பூஜ்ஜியம் என்ற அளவில் உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் நேற்று (நேற்று முன்தினம்) 847 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா-தமிழக எல்லைப்பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்துக்கான 13 வழிகள் இருப்பதால், கவனமுடன் இருக்க வேண்டும்.
ஆசிய நாடுகள் அனைத்திலும் பெரிய அளவில் தொற்று வேகமாக பரவி கொண்டிருக்கிறது. எனவே தமிழகத்தில் பொதுமக்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தடுப்பூசி மட்டும்தான் தொற்றில் இருந்து விடுபட ஒரே தீர்வு. சென்னை ஐ.ஐ.டி.யில் கடந்த 6 மாதங்களில் 40 முதல் 50 மான்கள் இறந்து விட்டதாக கூறினார்கள்.
வைரமாக மாற்றும்
மேலும், அங்கிருந்த நாய்களினால் இந்த மான்கள் இறந்ததாக புகார்களும் எழுப்பப்பட்டது. ஆந்த்ராக்ஸ் நோய் என்பது கால்நடைகளுக்கு பரவக்கூடிய நோய். இதன் காரணமாக மான்கள் இறக்கவில்லை. மேலும், இறந்துபோன மான்களின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகு இறப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகிறது.
தற்போது, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தின் மூலம், அரசு பள்ளிகளில் மாணவிகள் படிப்பது என்பது கூடுதலாகும். மேலும், அனைவரும் பட்டதாரிகளாக மாற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு 30 லட்சம் மாணவிகள் பட்டதாரிகளாக உருவாவதற்கு இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இது தங்கத்தையும் தாண்டி, மாணவிகளை வைரமாக மாற்ற கூடிய நல்ல திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story