மதுரை: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் - 3 பேர் மீது வழக்குப்பதிவு
ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை,
கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கடந்த பிப்ரவரி மாதம் கூறியது.
ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளத்தை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்துவர தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, பள்ளி, கல்லூரி உள்பட கல்வி நிலையங்களில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகள் அணிய தடை விதித்த மாநில அரசின் உத்தரவு செல்லும். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் மத அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் உள்ள ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநில ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு இஸ்லாமிய மதத்தினர் எதிர்த்து தெரிவித்தனர்.
அந்த வகையில், கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம் கோரிப்பாளையத்தில் இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சார்பில் நேற்று முன் தினம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய தவ்ஹித் ஜமாத் நிர்வாகி ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தவ்ஹித் ஜமாத்தின் மாநில தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரஹமத்துல்லா, மதுரை மாவட்ட தலைவர் அசன் பாட்ஷா, மாவட்ட துணை செயலாளர் ஹபிபுல்லா உள்ளிட்டோர் பேசினார்கள்.
அப்போது கர்நாடக ஐகோர்ட்டு தீர்ப்பு குறித்தும், நீதிபதிகளுக்கு கொலை மிரட்டும் வகையிலும் அவதூறாகவும் பேசினர்.
இது குறித்து அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகநாதன், தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அவர்கள் 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் கோைவ ரஹமத்துல்லா கைது செய்யப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story