தனியார் நிறுவனத்துக்கு மின் திட்டத்தை ஒதுக்கிய விவகாரம்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு


தனியார் நிறுவனத்துக்கு மின் திட்டத்தை ஒதுக்கிய விவகாரம்: கவர்னருடன் அண்ணாமலை சந்திப்பு
x
தினத்தந்தி 22 March 2022 12:32 AM IST (Updated: 22 March 2022 12:32 AM IST)
t-max-icont-min-icon

தனியார் நிறுவனத்துக்கு மின்வாரியம் மின் திட்டத்தை ஒதுக்கிய விவகாரம் தொடர்பாக கவர்னருடன், அண்ணாமலை சந்தித்து பேசினார்.

சென்னை,

பிரபல தனியார் நிறுவனத்துக்கு ரூ.4 ஆயிரத்து 442 கோடி மதிப்பிலான திட்டத்தை தமிழக மின்சார வாரியம் முறைகேடாக ஒதுக்கி உள்ளதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “அண்ணாமலை ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறார். மின் வாரியத்தின் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்கவில்லை என்றால் அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.

கவர்னருடன் சந்திப்பு

இந்தநிலையில், சென்னை கிண்டியில் உள்ள ராஜ் பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நேற்று சந்தித்தார். அப்போது ஒரு கோரிக்கை மனுவையும் கவர்னிடம் கொடுத்தார்.

இந்த சந்திப்பின்போது, தமிழக பா.ஜ.க. மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், வக்கீல் பிரிவு மாநில தலைவர் பால் கனகராஜ், மாநில செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் வி.பி.துரைசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

கோரிக்கை மனு

தமிழகத்தின் நலன் குறித்தும், சட்டம்-ஒழுங்கு குறித்தும் கவர்னரிடம் எங்களுடைய மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். மின்வாரிய ஒப்பந்தத்தை பெற்றுள்ள தனியார் நிறுவனம் குறித்தும் தெளிவான விளக்கத்தையும், அறிக்கையையும் கவர்னரிடம் கொடுத்திருக்கிறோம். எங்களுடைய கோரிக்கையை கேட்டறிந்த கவர்னர், பரிசீலிப்பதாக தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே கவர்னருடன் நடந்த சந்திப்பு தொட்பாக அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘தமிழக நலன் சார்ந்த விஷயங்களுக்காக எங்களுடைய நிர்வாகிகளுடன் கவர்னரை சந்தித்தேன். ஆளும் தி.மு.க. அரசு அனைத்து விதிகளையும் மீறி, சமீபத்தில் மின் திட்டத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக வழங்கியது தொடர்பாக ஒரு கோரிக்கை மனுவை வழங்கினோம்’’ என்று கூறியுள்ளார்.

Next Story