33 பேருக்கு தொற்று: 10 மாவட்டங்களில் கொரோனா இல்லை


33 பேருக்கு தொற்று: 10 மாவட்டங்களில் கொரோனா இல்லை
x
தினத்தந்தி 29 March 2022 4:39 AM IST (Updated: 29 March 2022 4:39 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நேற்று 33 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா தொற்று குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 28 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 18 பேரும், பெண்கள் 15 பேரும் உள்பட மொத்தம் 33 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்த பட்சமாக செங்கல்பட்டு, கோவை உள்பட 11 மாவட்டங்களில் 2-க்கும் குறைவானோர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

26 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை

மேலும் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகர் ஆகிய 26 மாவட்டத்தில் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 74 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் தொடர்ந்து 11-வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 38 ஆயிரத்து 25 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 61 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சையில் 366 பேர் உள்ளனர். மேலும் அரியலூர், தர்மபுரி உள்பட 10 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்போ மற்றும் சிகிச்சையிலோ ஒருவர் கூட இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story